காட்டுள் நடந்துகொள்ளும் முறை மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்துந் தாளிசைப்புங் காட்டுளே யானும் பழித்தார மாந்தம்மின் மூத்த உளவாக லான். (இ-ள்.) காட்டுளேயானும் - காட்டினிடத்திலேனும், தம் மின் மூத்த - தம்மினும் மூத்தன, உளவாகலான் - உளவாயிருப்பதனால், (அங்கும்) மோட்டுடைப் போர்வையோடு - உடலின் மீது போர்த்தலும், ஏக்கழுத்தும் - இறுமாந்திருத்தலும், தாள் இசைப்பு - இரு தாளையும் சேர்த்திணைத் திருத்தலும், பழி தாரமாம் - பழியின் எல்லையாம். (ப. பொ-ரை.) காட்டினிடத்திலேனும் தம்மினும் மூத்தன உளவா யிருப்பதனால், அங்கும் உடலின்மீது போர்த்தலும், இறுமாந்திருத்தலும், இரு தாளையுஞ்சேர்த்து இணைத்திருத்தலும் பழிக்கு ஏதுவாகும். (க-ரை.) காட்டிலும் உடலின்மீது போர்த்தலும், செருக்குற்றிருத்தலும் கூட, அட்டணைக்காலிட்டிருத்தலும் ஆகா. ‘பழித்தார் மரம் தம்மின்' என்ற பாடங்கொண்டு மரங்கள் தம்மின் மூத்த உளவாகலான் பழித்தார் என்று முடிக்க, ஏக்கழுத்தும் - எடுத்த கழுத்து : அஃதாவது தலையெடுப்பு (இறுமாப்பு). தாரம் - எல்லை. மோடு - உயர்வு; இங்கு இடைக்கு மேலுயர்ந்த உடலைக் குறித்தது. மோட்டுடைப் போர்வையோடு என்பதற்கு உடம்பின்மேல் உடையைப் போர்த்தலும் எனவுங் கூறலாம். மூத்த : பலவின்பால் வினையாலணையும் பெயர். (91) அந்தணர் வாய்ச்சொல் கேட்டல்தலைஇய நற்கருமஞ் செய்யுங்கா லென்றும் புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல் என்றும் பிழைப்ப திலை. (இ-ள்.) தலைஇய - மேலான, நல் கருமம் - நற்செயல்களை, செய்யுங்கால் - செய்யுமிடத்து, என்றும் - எப்போதும், புலையர்வாய் - புலையரிடத்து, நாள் கேட்டு செய்யார் - நாள் கேட்டுச் செய்யார், தொலைவு - ஒழுக்கக்கேடு, இல்லா -இல்லாத,
|