(ப. பொ-ரை.) கூறப்பட்ட இந்நான்கு எச்சிலையும்மிகக் கடைப்பிடித்து ஒன்றனையும் ஓதார்,வாயாலொன்றைச் சொல்லார், கண் துயிலார் எஞ்ஞான்றும்மதியுடையவராக வேண்டுவோர். (க-ரை.) நால்வகை எச்சிலு முண்டானவிடத்து ஒன்றும் படித்தலாகாது, வாயா லொன்றையுஞ் சொல்லலாகாது,தூங்கலாகாது. கடைப்பிடித்தல் - கைக்கொண்டொழுகல். வளர்தல்- கண் வளர்தல், தூங்கல். மேதை - அறிவு; எதிர்மொழி: பேதை. ஓதார் உரையார் வளரார் என்பவற்றில் எதிர்மறைஆகார இடைநிலை புணர்ந்துகெட்டது. எ + ஞான்று - எஞ்ஞான்று;ஞான்று - பொழுது. (8) காலைமாலைக் கடவுள் வணக்கம்நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத் தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி நின்று தொழுதல் பழி. (இ-ள்.) நாள் அந்தி - சிறுகாலையில், கோல் தின்று- ஒரு கொம்பாலே பல் துடைத்து, கண் கழீஇ - கண் கழுவி,தான் தெய்வத்தை - தான் வணங்குங் கடவுளை, அறியும்ஆற்றால் - அறியும் நெறியால், தொழுது எழுக - தொழுக,பின் ஒரு கருமத்தைத் தொடங்குக. அல்கு அந்தி - மாலைப்பொழுதின் கண், நின்று தொழுதல் - தான் வணங்குங்கடவுளை நின்று வணங்குதல், பழி - குற்றமாம். (ப. பொ-ரை.) சிறு காலையின்கண் ஒரு கோலாலே பற்றுடைத்துக்கண்கழுவித் தான் வணங்குந் தெய்வத்தைத் தானறியும்நெறியால் தொழுக. மாலைப்பொழுதின்கண் தான் வணங்குந்தெய்வத்தை நின்று தொழுதல் குற்றமாம்; இருந்து தொழுக. (க-ரை.) விடியற்காலத்தில் பல் துடைத்துச் சுத்தஞ்செய்து கடவுளை வழிபட்டுப் பின் ஒரு கருமஞ்செய்க.மாலைக் காலத்தில் வீற்றிருந்தே கடவுளை வழிபடுக. நாள் அந்தி - நாட்காலை, சிறுகாலை; அந்தி - கூடுதல்,பொருந்துதல்; அஃதாவது பகலுமிரவுங் கூடுகின்ற காலம்.சந்தி - மாலை வேளை. அல்கு - குறை. அல்குதல் - வெளிச்சம்குறைதல். கோல் - பற்குச்சு. தானறியுமாற்றால் -சமயமரபின்படி. கழீஇ : சொல்லிசையளபெடை. (9)
|