பக்கம் எண் :

75

நடக்கலாகாது; கடுஞ்சொற் கூறலாகாது; இருவராகவிருந்து பேசுமிடத்திற்கும் போதலாகாது.

‘சொல்லார் விடல்' என்ற பாடத்துக்கு இருவராகச் சிலர் வேறே நின்றுழியும் சொல்லாதொழிக என்றுரைக்க. திமிர்ந்து - தேய்த்து. உஞற்றார் - உஞற்று + ஆ + ஆர் என்று பிரித்துரைக்க.

(93)

ஐயமில் காட்சியார் செயல்

கைசுட்டிக் கட்டுரையார் கான்மே லெழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோ டொப்புரையார்
கையிற் குரவர் கொடுப்ப இருந்தேலார்
ஐயமில் காட்சி யவர்.

(இ-ள்.) ஐயம் இல் - ஐயமற்ற, காட்சியவர் - அறிவுடையவர், கை சுட்டி - பெரியோர் முன் கையால் ஒன்றைக் குறித்துக் காட்டி, கட்டுரையார் - பேசார், கான்மேல் - காலின்மேல், எழுத்து இடார் - எழுதார், இல்லாரை - கல்வி முதலியவையில்லாதவர்களை, உள்ளாரோடு - அவற்றை யுடையாரோடு, மெய் சுட்டி - மெய்யே என்று சாதித்து, ஒப்பு உரையார் - ஒப்புமை கூறார், குரவர் - பெரியோர், கொடுப்ப - கொடுப்பவற்றை, இருந்து - உட்கார்ந்துகொண்டு, கையில் ஏலார் - கையில் வாங்கார்.

(ப. பொ-ரை.) ஐயமற்ற அறிவுடையோர் தங்குரவர் முன்கையைச் சுட்டிக்காட்டிப் பேசார், காலின்மேல் எழுதார், கல்வி முதலியவற்றை யுடையாரோடு அவற்றை இல்லாரை மெய்யெனச் சாதித்து ஒப்பிட்டுக் கூறார், குரவர் கொடுப்பதை உட்கார்ந்திருந்து ஏற்கார்.

(க-ரை.) பெரியோர்க்கு முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசுதலும், காலால் எழுதுதலும், அறிவொழுக்கங்கள் இல்லாரை அவற்றையுடையார்க்கு ஒப்பாகச் சொல்லிச் சாதித்தலும், பெரியோர் கொடுப்பதை இருந்து வாங்குவதும் தகாத செயல்கள்.

‘காலாலெழுத்திடார்' என்ற பாடங்கொள்ளின், காலால் எழுத்திட்டுக் காட்டார் என்க. காட்சி - அறிவு. சுட்டுதல் - குறித்துக் காட்டல். கொடுப்ப : பலவின்பால் வினையாலணையும் பெயர்; கொடுக்க என்ற பொருளாயின் செயவெனெச்சம். ஏலார் - ஏல் : பகுதி.

(94)