பக்கம் எண் :

77

இவை போல் - என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல, நல்ல - நல்லனவாகிய, தம் கருமம் - தங் கருமத்தை, கடைப்பிடித்து - சோராமல் கைக்கொண்டு, தம் கருமம் - தங்கருமத்தை, அ பெற்றி ஆக - அம்மூன்றின் தன்மை போல், முயல்பவர்க்கு - செய்பவர்க்கு, ஆசாரம் - (இல்வாழ்க்கையின்) ஒழுக்கம், எ பெற்றியானும் - எத்தன்மையானும், படும் - சிறப்புறும்.

(ப. பொ-ரை.) ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு, கிடையாத காலத்திற்கு உதவக்கிடைத்த காலத்தில் உணவிற்குரியவற்றைச் சேர்த்தலும், குளிர் காற்று முதலியவற்றால் இடையூறுஉறாதவகையாக இல்லம் இயற்றிக்கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்துண்கையுமாகிய இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானுஞ் சிறப்புறும்.

(க-ரை.) எறும்பு, தூக்கணங் குருவி, காக்கை இவற்றின் செய்கையைக் கடைப்பிடித்தவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எவ்விதத்திலும் சிறக்கும்.

நந்தல் - பெருகுதல், நந்து எறும்பு - ஆக்கம் பெருகிய எறும்பு. இவற்றிற்கு ஆக்கம் தத்தங் கருமத்தை நன்றாகச் செய்தல், நந்துகின்ற எறும்பு என்ற முறையிற் கொள்ளின் வினைத்தொகையாம்.

"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள." - திருக்குறள்

(96)

பெரியோர்முன் ஒன்றைச் சொல்லும் முறை

தொழுதானும் வாய்புதைத் தானுமஃ தன்றிப்
பெரியார்முன் யாது முரையார் பழியவர்
கண்ணுளே நோக்கி யுரை.

(இ-ள்.) பெரியார் முன் - (அறிஞர்) பெரியார் முன்பு, யாதும் - ஒன்று உரைக்கவேண்டின், தொழுதானும் - வணங்கி நின்றேனும், வாய் புதைத்தானும் - வாய்புதைத்து நின்றேனும், அஃது அன்றி - உரைப்பரேயன்றி, உரையார் - வேறு வகையிற்சொல்லார், (ஆதலால்) அவர்கண் - நீ அவர்முன், பழி உள்ளே நோக்கி - குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து, உரை - உரைப்பாயாக.