(ப. பொ-ரை.) அறிஞர், பெரியார் முன் யாதேனும் ஒன்று உரைக்கவேண்டின், வணங்கி நின்றேனும் வாய்புதைத்து நின்றேனும் உரைப்பரேயன்றி, வேறு வகையின் உரையார்; ஆதலால் நீ அவர்முன் குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து உரைப்பாயாக. (க-ரை.) பெரியோரிடத்தி லொன்றைப் பேசும்பொழுது வணங்கி நின்றாவது வாய் பொத்தி நின்றாவது சொல்வதன்றி வேறுவிதமாகச் சொல்லலாகாது, அவர்முன் குற்றம் யாதும் உண்டாகாமல் ஆராய்ந்து கொள்க. ‘வழியவர்' என்றும் பாடம். உரை என்பதற்கு நீ தோன்றா எழுவாய். (97) புகத்தகா இடங்கள்சூதர் கழகம் அரவம் அறாக்களம் பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவுந் தரும். (இ-ள்.) சூதர் கழகம் - சூதாடும் இடத்திலும், அரவம் அறா களம் - பாம்புகள் நீங்காதுறையும் இடத்திலும், பேதைகள் அல்லார் - மூடரல்லாதவர், புகாஅர் - நுழையார், புகுபவேல் நுழைவாரானால், ஏதம் பலவும் தரும் - பல துன்பங்களையும் உண்டாக்கும். (ப. பொ-ரை.) சூதாடுமிடத்தும், பாம்புகள் நீங்காதுறையும் இடத்தும், அறியாமையை யுடையரல்லார் புகார்; புகுவராயின் பல துன்பங்களும் உளவாம். (க-ரை.) சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர் செல்லார். "அரவ மமர்களம்" என்றும் பாடம், "சூதும் வாதும் வேதனை செய்யும்" ஆதலாலும், "கள்ளுண விரும்புதல் கழகஞ் சேர்தல்மால் உள்ளுறப் பிறர்மனை நயத்தல் ஒன்னலார்க் கெள்ளரு ஞாட்பினுள் இரியல் செய்திடல் வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே,"
|