பக்கம் எண் :

80
ஆசாரத்தினின்றும் விலகியவர்

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசன் தொழில்தலை வைத்தான் மணாளனென்
றொன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.

(இ-ள்.) அறியாத தேயத்தான் - அறியாத நாட்டவனும் - ஆதுலன் - வறியவனும், மூத்தான் - ஆண்டில் முதிர்ந்தவனும், இளையான் - சிறுவனும், உயிர் இழந்தான் - உயிரிழந்தவனும், அஞ்சினான் - அஞ்சினவனும், உண்பான் - உண்பவனும், அரசர் தொழில் - அரசரது கட்டளையை, தலைவைத்தான் - தாங்கினவனும், மணாளன் - மணமகனும், என்ற ஒன்பதின்மர் - என்ற இந்த ஒன்பது பேரும், உரைக்குங்கால் - சொல்லுமிடத்து, ஆற்றவும் - மிகுதியும், ஆசாரம் - ஒழுக்கத்தினின்றும், வீடு பெற்றார் - நீக்குதலை யடைந்தவராவர்.

(ப. பொ-ரை.) அறியாத தேசத்தான், வறியோன் மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர் தொழிலில் : தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையா யுரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவர்.

(க-ரை.) அறியாத தேசத்தான் முதலிய ஒன்பதின்மருக்கும் ஆசாரக் கட்டுப்பாடில்லை.

கண்டீர் : முன்னிலையசை, வீடு - விடுதல் : முதனிலை திரிந்த தொழிற்பெயர். ‘உரைக்குங்கால் ஆற்றவும்' ‘உலகத்தில் ஆற்றவும்' என்றும் பாடம். ஆசாரம் - ஒழுக்கம். மணவாளன் : மணாளன் என மரீஇயது. ஒன்பதின்மர் என்பதில் முற்றும்மை தொக்கது. இங்ஙனங் கூறியது நூல் செய்வோர் மரபும் நூலின் முறையுமா மென்றறிக.

(100)

முற்றிற்று.