பக்கம் எண் :

100

148. முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினர் என்ப தினத்தால் அறிக
கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா
அயலறியா அட்டூணோ இல்.

(சொ-ள்.) கயல் இயலும் கண்ணாய் - சேலை ஒத்து விளங்கும் கண்ணை உடையாய்!, அய லறியா அட்டு ஊணோ இல் - அயல் மனையாரால் அறியப்படாது சமைக்கப்படும் உணவோ இல்லை, (ஆதலால்) முயலவோ வேண்டா - ஒருவரது இயல்பை யறிய மற்றொன்றால் அறியவேண்டுவதில்லை, முனிவரையானும் - முனிவரேயாயினும், இயல்பினர் என்பது இனத்தால் அறிக - நல்ல இயல்பினை உடையார் தீய இயல்பினை உடையார் என்பதை அவரால் கூடப்பட்ட இனத்தாரால் அறிக. (ஆகையால்) கரியர் வேண்டா - சாட்சி சொல்வோர்வேண்டுவதில்லை.

(க-து.) ஒருவருடைய இயல்பை அவரது இனத்தால்அறியலாம்.

(வி-ம்.) ஆயினும் என்றது ஆனும் எனக் குறைந்து நின்றது.

'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.

(7)

17. முயற்சி

149. எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குந் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லை
தமக்கு மருத்துவர் தாம்.

(சொ-ள்.) எமக்கு துணையாவார் வேண்டும் என்று எண்ணி - எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து, தமக்குத் துணையாவர் தாம் தெரிதல்வேண்டா - தமக்கு உதவிசெய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டா, பிறர்க்கு பிறர் செய்வ துண்டோ - பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ?, இல்லை - துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை, தமக்கு மருத்துவர் தாம் - தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்.

(க-து.) நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொளல் வேண்டும்.