பக்கம் எண் :

102

தம்மோடு தொடர்புடையராய் வந்த விருந்தினரை உபசரித்து, வெஞ்சமத்து - கொடிய போரிடத்து, வாள் ஆண்மையாலும் வலியாராய் - வாளால் செய்யும் ஆண்மையிலும் வலிமையுடையராய், தாளாண்மை தாழ்க்கும் மடிகோள் இலராய் - முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலைக் கொள்ளாதவராய், வருந்தாதார் வாழ்க்கை - வருந்திச் செய்யாதவர்களது மனைவாழ்க்கை, திருந்துதல் இன்று -செப்பம் அடைதல் இல்லை.

(க-து.) வேளாண்மை, விருந்தோம்பல், வாளாண்மை, தாளாண்மைமுதலியன மனைவாழ்க்கை யுடையார்க்கு வேண்டுமென்பதாம்.

(வி-ம்.) மனைவாழ்க்கை திருந்துவதற்குவாளாண்மையையும் ஒன்றாகக் கூறினார் அஃது ஆடவற்குச்சிறந்தமைபற்றி.

'வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று' என்பது பழமொழி.

(3)

152. ஒன்றால் சிறிதால் உதவுவ(து)ஒன் றில்லையால்
என்றாங் கிருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
சென்றது பேரா தவர்.

(சொ-ள்.) ஒன்றால் - உள்ள பொருள் ஒன்றே யென்றும், சிறிதால் - அதுவும் சிறியதே என்றும், உதவுவது ஒன்றில்லையால் - எடுத்த செயலை முடிப்பதற்குப் போதிய உதவி இல்லையே, என்று ஆங்கு இருப்பின் - என்று நினைத்துச் சோம்பி இருப்பின், இழுக்கம் பெரிதாகும் - குற்றம் பெரிதாகும், நின்றது சென்றது பேராதவர் - தம்மிடத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்தும் பிறரிடத்துக் கொடுத்த பொருளைத் தாம் மீளக் கொண்டும் எவ்விதத்திலும் முயற்சி செய்யாதவர்கள், அன்றைப் பகலேயும் வாழ்கலார் - ஒருநாளின்உள்ளேயே அழிந்துவிடுவர்.

(க-து.) ஒருவன் சோம்பலுடையவனா யிருப்பின், அதனால் மிகுந்தகுற்றங்கள் உளவாம்.

(வி-ம்.) 'நின்றது சென்றது பேராதவர்' என்பது கொடுக்கல் வாங்கல் முதலிய தொழில்களில் எதுவுஞ் செய்யாதார் என்பதாம். அங்ஙனம் ஏதாவது நிகழ்த்தின் ஒரு சிறிது ஊதியமாவது அடையலாம். அதுவுமின்றி யிருப்பார்குற்றங்களாற் பீடிக்கப்படுவர் என்பதாம்.

'நின்றது சென்றது பேராதவர்' என்பது பழமொழி.

(4)