பக்கம் எண் :

103

153. இனியாரு மில்லாதார் எம்மிற் பிறர்யார்
தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க முனிவில்லார்
முன்னிய தெய்தாமை யில்.

(சொ-ள்.) இனி - இப்பொழுது, யாரும் இல்லாதார் எம்மில் பிறர் யார் - சார்வாக ஒருவரையு மில்லாதார் எம்மைவிட யாருளர் இவ்வுலகத்தில், தனியேம் யாம் - தனிமையுடையவராக ஆயினோம், என்று ஒருவர் தாம் மடியல் - என்று கருதி ஒருவர் சோம்பியிருக்க வேண்டுவதில்லை, முனிவு இலர் ஆகி முயல்க - எடுத்த காரியத்தின்கண் சோர்வு இல்லாதவராகி முயற்சி செய்க, முனிவு இல்லார் முன்னியது எய்தாமை இல் - காரியத்தின்கண் வெறுப்பில்லாதவர்கள் தாம்நினைத்ததை அடையாமலிருத்தலில்லை யாதலால்.

(க-து.) தொடங்கிய காரியத்தில் சோம்பலும் வெறுப்பும் இன்றிஅதனைச் செய்தல் வேண்டும்.

(வி-ம்.) தொடங்கிய செயலின்கண் வெறுப்பின்றிச் செய்யவே, அது விரைவில் முடியுமாதலால் நினைத்த பயனை அடைதல் கூடும். முயற்சியே செல்வத்தை உளவாக்குமாதலால் அதனைச் செய்க என்றார். தமது முயற்சியின்றித் துணையாவார் செய்வது ஒன்றுமில்லை யாதலால், அது கருதிச் சோம்பித் திரியேல் என்பார் 'மடியல் வேண்டா'என்றார்.

'முனிவில்லார் முன்னியது எய்தாமை யில்' என்பது பழமொழி.

(5)

154. தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

(சொ-ள்.) தன் தூக்கி - தன்னால் இக்காரியங்கள் முடியுமாவென்று முதலில் ஆராய்ந்து, தன் துணையுந் தூக்கி . தனக்குத் துணையாவாரையும் ஆராய்ந்து, பயன் தூக்கி - செய்தால் உளவாம் பயனையும் ஆராய்ந்து, மதிவல்லோர் அவை கொள்ப - அறிவிற் சிறந்தோர் அவற்றை மேற்கொள்வர், அற்றன்றி - அங்ஙனம் ஆராய்தல் இல்லாமல், யாதானும் ஒன்று கொண்டு - இயலாத