செயல்களுள் யாதானும் ஒன்றை மேற்கொண்டு, யாதானும் செய்தக்கால் - செய்யும் முறை யறியாது ஏதாவது செய்தால், யாதானும் ஆகிவிடும் - தான் தான் நினைத்ததின்றி அதற்கு மாறாகித்துன்பமே உண்டாகும். (க-து.) எக்காரியத்தையும் ஆராய்ந்தேதொடங்க வேண்டும். (வி-ம்.) 'யாதானும் ஆகிவிடும்' என்றமையால், தான்நினைத்தது கைகூடாமல் துன்பமே வந்துமுடியு மென்பதாம். 'யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்' என்பது பழமொழி. (6) 155. வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம் படியிழுப்பின் இல்லை யரண். (சொ-ள்.) வீங்கு தோள் செம்பியன் சீற்றம் - பருத்த தோளை உடைய சோழனது சினம், விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் - மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால், முடியும் திறத்தால் முயல்க - எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண் - கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின்அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால். (க-து.) நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாதகாரியம் ஒன்றில்லையாம். (வி-ம்.) செம்பியன் ஆகாயத்தின்கண் இருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டு அழித்தான். இதுபற்றியே இவன் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் எனப்பட்டான். அம்பினை வலிவாகத் தொடுப்பின் கவசமும் பிளந்துபோதல் போல, முடிந்த அளவு முயற்சிசெய்தால் பயன் அடையலாம் என்பது. இதற்குப் போதிய சான்று சோழனேயாவான். ஆங்கு : அசை. 'கூர் அம்பு அடியிழுப்பின் இல்லை அரண்' என்பது பழமொழி. (7)
|