156. எங்கணொன் றில்லை எமரில்லை என்றொருவர் தங்க ணழிவுதாம் செய்யற்க - எங்கானும் நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள். (சொ-ள்.) எங்கண் ஒன்று இல்லை - எம்மிடத்து ஒரு பொருளும் இல்லை, எம ரில்லை - எமக்கோ சுற்றத்தாருமில்லை, என்று - என்று நினைத்து, ஒருவர் தம்கண் அழிவு தாம் செய்யற்க - ஒருவர் தம்மிடத்துவரும் பெருமையை அழிக்கக் கூடியனவற்றைச் செய்யாதொழிக, எங்கானும் - எங்கே பிறந்தவர்க்காயினும், ஆற்றவும் முன்கை நெடியார்க்கு - மிகவும் முன்கை நீளமாக உடையவர்கட்கு, தோள் நன்கு திரண்டு பெரியவாம் - தோள்கள் மிகவும் திரட்சியுற்றுப் பெரியனவா யிருக்கும். (க-து.) பெருமையை அழித்தற் குரியனவற்றைத் தாம் செய்யாதிருக்கவேண்டும். அதனால் மிக்க புகழ்உண்டாகும். (வி-ம்.) முன்கை நெடியார்க்குத் தோள் பெரிதாயிருத்தல் போல, அமைந்த பெருமையை அழித்தற்குரியனவற்றைத் தாம் செய்யாதிருப்பதுவே மிக்க புகழ் ஆகும். 'நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள்' என்பது பழமொழி. (8) 157. நிலத்தின் மிகையாம்பெருஞ்செல்வம் வேண்டி நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின் உலக்கைமேல் காக்கையென் பார். (சொ-ள்.) நிலத்தின் மிகையாம் பெருஞ் செல்வம் வேண்டி - நிலத்தின்கண் வாழ்வதற்கு மிகுதியாகிய பெரிய செல்வத்தை விரும்பி, நலத்தகு வேந்தருள் நல்லோரைச் சார்ந்து - நன்மை மிகுந்த அரசர்களுள் நல்லோர் ஒருவரை அடைந்து (அங்குத் தங்கியிராமல்) நிலத்து நிலைகொள்ளா காலர் - ஓரிடத்தும் தங்குதலைக் கொள்ளாத கால்களை உடையவர்கள், காணின் - ஆராயுமிடத்து, உலக்கைமேல் காக்கை என்பர் - உலக்கை மேலுள்ள காக்கைஎன்று கூறப்படுவார்கள். (க-து.) அறிவிலார் ஒருவரிடத்திலும் ஒரு தொழிலிலும் நிலைபெறாது வருதலால் நன்மையைப் பெறமாட்டார்கள்.
|