(வி-ம்.) காக்கை உரலின்கண் உள்ள அரிசியை உண்ணவும் மாட்டாது, உலக்கைமேல் உட்காரவும் மாட்டாது அதனைச் சூழ்வருதல்போல, அறிவிலாரும் ஒருவரிடம் நிலைத்து நிற்காது பயனையும் இழந்து சுழன்று வருவர்என்பதாம். 'உலக்கை மேல் காக்கை' என்பது பழமொழி. (9) 158. தலைக்கொண்ட தங்கருமம்தாமடி கொண்டு கடைப்பிடியில் லாதார்பால் வைத்துக் - கடைப்பிடி மிக்கோடி விட்டுத் திரியின் அதுபெரி(து) உக்கோடிக் காட்டி விடும். (சொ-ள்.)தலைக் கொண்ட தம் கருமம் - மேற்கொண்ட தமது செயலை, தாம் மடி கொண்டு - தாம் சோம்பல் கொண்டு, கடைப்பிடி இல்லாதார்பால் வைத்து முடிக்கும் உறுதியில்லாதா ரிடத்துத் தம் செயலை அவர் செய்யுமாறு வைத்து, கடைப்பிடி விட்டு - நடத்தி முடிக்கும் உறுதியைவிட்டு, மிக்கு ஓடித்திரியின் - செருக்கில் மிகுந்து ஓடித்திரியின், அது - தாம் மேற்கொண்ட அச்செயல், பெரிது உக்கு ஓடி - மிகவும் சிதைந்து, காட்டிவிடும் -தன்னைச் செய்வதாக மேற்கொண்டவனிடத்தில் தவ்வையைஅறிமுகப்படுத்தும். (க-து.) முயற்சி இல்லதானை மூதேவிஅடைவாள். (வி-ம்.) தாமே செய்ய வேண்டியிருக்கவும் செய்யாது தன்னைப்போன்ற வேறு ஒரு சோம்பலுடையாரிடத்தில் தன்னை வைத்து அவன் நீங்கலின், அதுதானாகவே வலியச் சென்று அவனிடத்தில் மூதேவியைஆற்றுப்படுக்கும். 'அது பெரிது உக்கோடிக் காட்டிவிடும்' என்பது பழமொழி. (10) 159. தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார் பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் சென்னீர் அருவி மலைநாட! பாய்பவோ வெந்நீரு மாடாதார் தீ. (சொ-ள்.) செல் நீர் அருவி மலைநாட - பரந்து செல்கின்ற அருவியை உடைய மலைநாடனே!, தம்மால் முடிவதனை - தம்மால் முடிக்கலான தொரு செயலை, தாம் ஆற்றி செய்கல்லார் - தாம்
|