அவனைத் தொழுது நீக்கிக்கொள்ள முடியாது, தம்மாலாகிய முயற்சி செய்தே அதனைநீக்கல் வேண்டு மென்பதாம். 'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்' என்பர் திருவள்ளுவரும். ஓலையைப் பழுதாக எழுதினான் அப்பழுதினையே பாதுகாவாதுநீக்குதல்போல முயற்சி செய்து அல்லலை நீக்குக வென்பதாம். 'இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது' என்பது பழமொழி. (12) 161. முடிந்ததற் கில்லை முயற்சி முடியா தொடிந்ததற் கில்லை பெருக்கம் - வடிந்தற வல்லதற் கில்லை வருத்தம் உலகினுள் இல்லதற் கில்லை பெயர். (சொ-ள்.) முடிந்ததற்கு முயற்சி இல்லை - முடிந்த செயலுக்கு முயற்சி செய்ய வேண்டுவதில்லை, முடியாது ஒடிந்ததற்கு பெருக்கம் இல்லை - முடிவுறாது இடையே முறிந்த செயலுக்கு ஆக்கமில்லை (அவைபோல), வடிந்தற வல்லதற்கு வருத்தம் இல்லை - குற்றமறச் செய்யவல்லதற்குச் செய்யும்பொழுது துன்பம் ஏற்படுதல் இல்லை, உலகினுள் இல்லதற்கு பெயர் இல்லை -உலகில் இல்லாத பொருள்களுக்குப் பெயர்கள் இல்லையாதலால். (க-து.) தம்மால் முடியுஞ் செயலை யாவருஞ் செய்க.அதனால் துன்பம் உண்டாகாது. (வி-ம்.) முடியாத செயலை மேற்கொண்டாலன்றித் துன்பம் உண்டாகாது வருத்தம் வருமென்று நினையாது, முடியும் காரியத்தில் முயற்சி செய்க என்பது. 'வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்' என்பது கருத்தாகலான் முன்னிரண்டும், உவமைகளாகவும் பின்னது ஆதாரமாகவும் கொள்ளப்பட்டன. உலகில் இல்லாத பொருள்களுக்குப் பெயரில்லையாதலால், முடியும்காரியத்திற்கு வருத்தம் இல்லை என்பதாம். 'இல்லதற்கு இல்லை பெயர்' என்பது பழமொழி. (13)
|