பக்கம் எண் :

109

18.கருமம் முடித்தல்

162. செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

(சொ-ள்.) செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும் - செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும், பொய் நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் - பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ள முடையார்க்கும், வெந்நீரில் தண்ணீர் தெளித்து - மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல, அந்நீர் அவரவர்க்கு தக்காங்கு - அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம், ஒழுகுப -ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.

(க-து.) காரியத்திற் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவுமிருந்து தங் கருத்தைநிறைவேற்றுவார்.

(வி-ம்.) உள்ளத்தில் கரவுடையாரிடத்தில் நாமும் அவரினும் மிக்க கரவுடையாராகவே இருத்தல் வேண்டும். அவரிடத்தில் செம்மையுடையராக ஒழுகின், அவர்கள் தாம் உள்ளுறச் செய்த இடையூறுகள் இவரறியுமாறு இல்லையே யென்று தாம் ஏமாற்றியதற்கு மகிழ்வதல்லது, நமது செம்மைகண்டு திருந்துதல் இலர். ஆகவே, அவரினுந் தாங்கரவுடையா ரென்பதை அவர்க்குக் காட்டி னல்லது நாம் நினைத்த காரியம் முடிவுபெறா தென்பதாம். உள்ளத்தில் அன்புடையராய்த் தமது செயலை முடிப்பார்க்குத் தாமும் அவரேபோல் உள்ளன்பு கோடல் வேண்டும். தமது செயலை முடிப்பாரிடத்தில் தாம் அன்பில்லாதார் போன்று ஒழுகவே, அன்பைப் பெறும்பொருட்டு நமது காரியத்தில் கண்ணுடையவராக இருப்பர் எனின், அவ்வன்பின்மை அவர் முயற்சியைக் குறைக்குமேயன்றி ஊக்கந்தராதென்பதாம். ஆகவே, அன்புடையாரிடத்தில் அவரேபோன் றொழுகுக. வெந்நீரில் தண்ணீர் கலந்து பதமாக்கிக்கொள்ளுதல்போல,அவரவர்க்குத் தகவொழுகிக் காரியங்கொள்க என்பதாம்.

'வெந்நீரில் தண்ணீர் தெளித்து' என்பது பழமொழி.

(1)