பக்கம் எண் :

110

163. தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத்
தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் - டேமாப்ப
முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே
உண்ஓட் டகலுடைப் பார்.

(சொ-ள்.) தாம் ஆற்றகில்லாதார் - தாம் தம்மைச் செவ்வை செய்துகொள்ள முடியாதார், தாம் சாரப்பட்டாரை - பாதுகாவலாகத் தம்மால் அடையப்பட்டாரை, தீ மாற்றத்தால் பகைப்படுத்திட்டு - தீயசொற்களால் பகைமையை உண்டாக்கி, முரண் அஞ்சி - எதிர்த்து நிற்கவும் பயந்து, ஏமாப்ப - சேமமாக, முன் ஓட்டு கொண்டு போவார் - முன் ஓடுதலை மேற்கொண்டு செல்பவர்கள், உண் ஓட்டு அகல் உடைப்பார் - தாம் உண்கின்ற ஓடாகிய உண்கலத்தை உடைப்பாரோ டொப்பர்.

(க-து.)தம்மால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளஇயலாதார் தமக்குச் சார்பானவரைச் சினந்து கூறாதொழிக.

(வி-ம்.) தமக்குச் சார்பாயிருந்தாரைச் சினந்து கூறுபவர், தாம் உண்கின்ற பாத்திரத்தை உடைப்பாரோ டொப்பர். 'ஓட்டுக்கொண்டு போவார்' என்றமையின், அவரால் பயன்பெறாதொழிதலேயன்றித் துன்புறவும் நேரிடும்என்பது பெறப்படும்.

'உண்ணோட் டகலுடைப்பார்' என்பது பழமொழி.

(2)

164. புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவா துவப்பவே கொள்க
வரையக நாட விரைவிற் கருமம்
சிதையும் இடராய் விடும்.

(சொ-ள்.)வரையக நாட - மலைமேலுண்டாகிய நாடனே!, புரைய கலந்தவர் கண்ணும் - உள்ளம் ஒப்ப நட்புக்கொண்டவரிடத்தும், கருமம் - அவரால் உளவாகும் செயலை, உரையின் வழுவாது - கூறுஞ் சொற்களில் வழுவாது, உவப்பவே கொள்க - அவர்கள் மனம் மகிழும்படி செயலை முடித்துக்கொள்க.விரைவில் - தமக்கு வேண்டிய பொழுதே அச் செயலைக் கொள்ள விரைவாயாயின், கருமம் சிதையும் - செயலும் முடிவுறாது இடையிலே அழிந்தொழியும், இடராய்விடும் -அங்ஙனம் அழிதலால் தமக்குத் துன்பம் உண்டாகும்.

(க-து.)மேற்கொண்ட செயலை அமைதியாகச் செய்க.இல்லையாயின் மிகுந்த துன்பங்களை அடைவாய்.