சோம்பலில் மிக்காரை வருத்தியாவது காரியம் செய்விப்போமாயினும், காரியம் தாம் விரும்பியகாலத்தில் முடிவுறாமையால் பயன்பெறுதல் இல்லையாம். 'மூரி உழுதுவிடல்' என்பது பழமொழி. (6) 168. ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ப வியங்கொள்ளின் - காணி பயவாமல் செய்வாரார் தஞ்சாகா டேனும் உயவாமல் சேறலோ இல். (சொ-ள்.) தம் சாகாடேனும் - தம்முடைய சகடமேயாயினும், உயவாமல் சேறல் இல் - உயவு நெய் இடாவிடில் செல்லுதல் இல்லை.(அதுபோல), ஆணியா(க) கொண்ட கருமம் - ஆணியைப்போல உறுதியாகத் தாம் கொண்ட செயலை, வியங்கொள்ளின் - ஒன்றும் கொடாமல் சிலரை ஏவினால், பதிற்று ஆண்டும் பாணித்தே செய்ப - பத்து ஆண்டாயினும் காரியத்தின்கண் விரைவின்றியே செய்வார்கள், காணி பயவாமல் செய்வார் ஆர் - காணியளவு பொருளாயினும் பயனாகப் பெறாமல் செயலைச் செய்வார் யார் உளர்?இல்லை. (க-து.) பொருளுதவி செய்து செயலைச் செய்வித்துக் கொள்க. (வி-ம்.) 'ஆணியாக் கொண்ட கருமம்' என்றது.இன்றியமையாத செயல் என்றதை.இதனையே நீண்ட நாட்களில் தாமதித்துச் செய்வாரெனின் ஏனைய செயல்களை அவர் செய்யும் காலம் அறிந்து கூறமுடியாது என்பதாம்.ஆகவே, உதவி செய்தாலன்றித் தமது செயல்விரைந்து நிகழாதென்பதாம்.உயவுநெய் - சகடத்தின் அச்சில் இடும் பசை. உயவு நெய் : காரணப்பெயர்.நெய்யின்றி ஒழியின் அச்சும் சக்கரமும் ஒன்றோடொன்று உராய்ந்து ஒலித்தலை, வருந்திஒலிப்பதாக மக்கள் நினைத்தனர். 'தம்சாகா டேனும் உயவாமல் சேறலோ இல்' என்பது பழமொழி. (7) 169. விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா துளி.
|