(சொ-ள்.) தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும், தொட்ட அளவில் மெலியும் தளிரின் மேலே நின்றதாயினும் - உளி தட்டாமல் செல்லாது - உளியானது தன்னை வேறொருவன் தட்டாமல் அத்தளிரை அறுத்துச் செல்லாது. (அதுபோல), கருமம் விட்டுச் செயவைத்த பின்னரும் - காரியத்தின் பொறுப்பை அவர்களிடத்தே விட்டு அவர்களையே செய்யுமாறு செய்த பின்னரும், முட்டாது அவரை வியங்கொளல் வேண்டும் - இடையீடின்றி அவரைஏவி ஆராய்தல் வேண்டும். (க-து.) நமது காரியத்தைப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு ஒருவர் செய்வாரேயாயினும் இத்துடன் பொறை கழிந்தது என்றிராது அவரைஅடிக்கடி ஊக்கப்படுத்துதல் வேண்டும். (வி-ம்.) வியங்கொளல் - ஏவி ஆராய்தல். செயல் சரியாக முடியாவிட்டால் அதற்குத் தகுந்த வழிகளைக் கூறுதல் வேண்டும். செயல் தாமதமாகச் செல்லின் அவரைஊக்கப்படுத்துதல் வேண்டும். 'தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா துளி' என்பது பழமொழி. (8) 170. காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவர் ஆற்றஎமக் கென்றே அமர்ந்திருத்தல் மாப்புரை நோக்கின் மயிலன்னாய்! பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை. (சொ-ள்.) மாபுரை நோக்கின் மயில் அன்னாய் - மாவடுவை ஒத்த கண்ணையும் மயிலையொத்த சாயலையுமுடையாய்!, கருமம் காட்டி - செயலினைக் காட்டிக்கொடுத்து, கயவர்மேல் வைத்தவர் - கீழ்மக்கள்மேல் காரியத்தைச் செய்துமுடிக்கும் பொறுப்பினை வைத்தவர், எமக்கு ஆற்ற ஆக்குவர் என்றே அமர்ந்திருத்தல் - எமக்கு மிகவும் செவ்வையாகக் காரியத்தைச் செய்து தருவர் என்று உறுதிசெய்து வாளா இருத்தல், புன்மீன் தலை - புல்லிய மீன்கள் (உலர்கின்ற) இடத்தில், பூசையைக் காப்பிடுதல் - பூனையைக் காவலாக வைப்பதனோ டொக்கும். (க-து.) தம்முடைய காரியத்தைக் கீழ்மக்களிடம் ஒப்பித்திருப்பவர் ஒருநன்மையும் அடையார். (வி-ம்.) காவலாக இருந்த பூனை பாதுகாத்து எமக்குத் தருமென் றெண்ணியிருந்தாரை ஏய்த்துத்தானுண்டல்போல
|