கீழ்மக்களும் தமக்குக் காரியத்தை முடித்துத் தருவர் என்றிருந்தாரை ஏய்த்துத் தாமேபயன்கொள்வர். 'பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை' என்பது பழமொழி. (9) 171. தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா முற்றலை நாடிக் கருமஞ் செயவையார் கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் மற்றதன் பாற்றேம்பல் நன்று. (சொ-ள்.) தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் - தெளிவாக அறிந்த அறிவுடையாரைத் தேடிவைப்பதல்லாமல், திறன் இலா முற்றலை - திறமையில்லாத முதிர்ந்தவர்களை, நாடி கருமம் செயவையார் - ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்துடையார்), ஒன்று கற்று அறிந்து கசடு அற்ற காலையும் - ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும், மற்று அதன்பால் - குணமில்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு, தேம்பல் நன்று -மெலிதலே நல்லது. (க-து.) காரியம் முடியவேண்டுமென்றுநினைப்பவர்கள் சிறந்த அறிவு பெற்றவர்களையேஅதனைச் செய்ய நிறுத்துதல் வேண்டும். (வி-ம்.) நட்டாரிடத்துக் குணமில்லையாயின் தாம் பிழைத்தன பொறுத்தல் முதலியன அவர்கண் இல்லையாம். ஆகவே, அத்தகையோர் நட்புக் குறைதலே நல்லது. நட்புக் கொள்வதற்கு ஆராயவேண்டுவனவற்றுள் தலை சிறந்தது குணமேயாம். கல்வி வேண்டுவதில்லை. குணமில்லாரிடத்துக் கொண்ட நட்புப் பயன்தராதொழிதல்போல,அறிவிலாரிடத்து ஒப்புவித்த காரியம் முடிதல் இல்லையாம். 'கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் மற்றதன்பாற் றேம்பல் நன்று' என்பது பழமொழி. (10) 172. உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான் கிழவனுரை கேட்கும் கேளா னெனினும் இழவன் றெருதுண்ட உப்பு.
|