(சொ-ள்.) உற்றான் உறாஅன் எனல் வேண்டா - தமக்கு உறவினன் உறவல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை, ஒண்பொருளை கற்றானை நோக்கி கைவிடுக்க - காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவாற் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க, கற்றான் கிழவன் உரை கேட்கும் - கல்வியறிவாற் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்துதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான், கேளான் எனினும் - கேளா தொழிவா னாயினும், எருது உண்ட உப்பு இழவு அன்று - காளை உண்ட உப்பு நட்டமாகாமைபோலப் பயன்கொடா தொழியான்என்பதாம். (க-து.) நமக்கு முடியவேண்டிய செயலையும் அதற்காக நாம் கொடுக்க இருக்கும் பொருளையும்கல்வியறிவு உடையானைத் தேடிக் கொடுக்கவேண்டும்என்பதாம். (வி-ம்.) கொள் முதலியவற்றை உப்பிட்டு உண்பிப்பது நோயைத் தவிர்த்து எருதுக்கு உரஞ்செய்வதால், எருது சலிப்பின்றித் தலைவனுக்கு வேலைசெய்யும். அதுபோல் கற்றவன் காரியம் செய்யும்போது அவனுக்கீந்த பொருள்நட்டமாகாமல் தலைவனுக்கு இலாபத்தையே உண்டாக்கும். 'இழவன்று எருதுண்ட உப்பு' என்பது பழமொழி. (11) 173. கட்டுடைத் தாகக் கருமஞ் செயவைப்பின் பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை; இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம். (சொ-ள்.) தொட்டாரை ஒட்டா பொருள் இல்லை - கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை, அட்டாரை ஒட்டா கலம் இல்லை - சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப்பொருளுமில்லை. (ஆதலால்), கட்டு உடைத்தாக - பாதுகாவலுடையதாகுமாறு, கருமம் செயவைப்பின் - செயலைச் செய்ய ஒருவனை நிறுத்த நினைப்பின், பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை - அச்செயலின்கண் பொருந்தி அதனிடத்துள்ள பயன் அனைத்தையும் கைக்கொண்டு உடனே விட்டு நீங்குகின்ற, அன்பிலாதாரை வையற்க -காரியத்தைச் செய்ய வையாதொழிக. (க-து.) காரியத்தால் உளதாகும் பயனைக் கைக்கொள்வானை ஒரு காரியத்தையும் செய்ய நியமித்தல் ஆகாது.
|