175. அகந்தூய்மை யில்லாரை ஆற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பின் அஃதால் - இகந்து நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல். (சொ-ள்.) அகம் தூய்மையில்லாரை ஆற்ற பெருக்கி - மனத்தின்கண் தூய்மையில்லாதவர்களை மிகவும் பெருக்கிக் கொண்டு, இகந்த உழி விட்டிருப்பின் - சேய்த்தாய இடத்தே தங்காரியம் முடிக்கும்பொருட்டு அவரைச் செல்லவிட்டு இருப்பின், அஃது - அச்செயல், நினைந்து தெரியானாய் - மனதின்கண் ஆராய்ந்து அறியானாய், யாமை - (யாமையைப் பிடித்த ஒருவன்) அந்த யாமையை, நீள் கயத்துள் இகந்து - நீண்ட குளத்திற்குப்போய், நனைந்துவா என்று விடல் - நீரால் நனையப்பெற்றுத் திரும்பிவா என்று சொல்லிவிடுதலை ஒக்கும். (க-து.) மனத்தூய்மை யில்லாதாரைச் சேய இடத்துள்ள கருமத்தை முடிக்கஅனுப்புதல் கூடாது. (வி-ம்.) யாமையைக் குளத்திற் கனுப்பின் திரும்ப வராததுபோல, மனத்தூய்மை யில்லாரும் காரியம் முடித்துத் திரும்புதல்இலர். 'நீள்கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல்' என்பது பழமொழி. (14) 176. உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம் புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல் நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டுக் கரையிருந் தார்க்கெளிய போர். (சொ-ள்.) நிரை யிருந்து மாண்ட அரங்கினுள் - வரிசையாக இருந்து மாட்சிமைப்பட்ட அரங்கின்கண், வட்டுக் கரையிருந்தார்க்கு - அரங்கின்கண் பொராதே பக்கத்திருந்தார்க்கு, எளியபோர் - எளியதாகத் தோன்றும் வட்டுப்போர், (அதன் நுட்பம் அறியாது ஆடுவாற்கு அரியதாகத் தோன்றும் அதுபோல), உழையிருந்து நுண்ணிய கூறி - பக்கத்தேயிருந்து நுட்பமான காரியங்களை ஆராய்ந்து கூறினும், கருமம் புரை இருந்தவாறு அறியான் - நுட்ப உணர்வு இல்லாதும் கருமத்தின்கண் குற்றம் இருந்த நெறியை அறிவதும் செய்யானாய், புக்கான் - கருமத்தைச் செய்யப்புகுந்தவன், விளிதல் - அழிவினை அடைவான்.
|