(க-து.) கருமம் செய்வார்க்கு நுண்ணுணர்வு மிகுதியும்வேண்டப்படுவ தொன்று. (வி-ம்.) விளையாட்டின் நுட்பமறிவார்க்கு எளிதாகத் தோன்றும் வட்டுப்போர் அஃதில்லார்க்கு அரியதாகத் தோன்றும்; அதுபோல, பிறர் கூறியும் நுண்ணுணர்வு பெறாதான் காரியம் செய்யுப்புகின் காரியம் அரியதாகத் தோன்றுவதோடு தனக்கும் இறுதி விளையும் என்பதாம். பெரிய போரினையும் தான் காரணமாய் நின்று உண்டாக்குதல் பற்றி வட்டுவிளையாட்டு வட்டுப்போர் எனப் பெயர் பெற்றது. வட்டு - சூதாடு கருவி. 'வட்டுக் கரையிருந்தார்க் கெளிய போர்' என்பது பழமொழி. (15) 19.மறை பிறர் அறியாமை 177. சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள் ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும் சீர்ந்தது செய்யாதா ரில். (சொ-ள்.) கொற்றம் புள் ஊர்ந்து - வெற்றியையுடைய கருடன்மீது ஏறி வீற்றிருந்து, உலகம் தாவின அண்ணலே யாயினும் - உலகத்தைத் தாவியளந்த பெருமைபொருந்திய திருமாலே யாயினும், சீர்ந்தது செய்யாதார் இல் - தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை (ஆகையால்), அறிவுடையார் - அறிவிற் சிறந்தோர், சுற்றத்தார் நட்டார் என சென்று - உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று, அற்றத்தால் - மறைத்துச் செய்யும் காரியத்தின்கண், ஒருவரை தேறார் - அவருள் ஒருவரையும்தெளிதல் இலர். (க-து.) மறைத்துச் செய்யும் காரியத்தின்கண்யாவராயினும் நம்புதல் கூடாது. (வி-ம்.) திருமால் முதலியோர்களும் தமக்கு ஊதியம் பயப்பதாயின் பழி, பாவம் பாரார். ஆகவே, சுற்றத்தார் நட்டார் என்பன கொண்டு அவர் செய்யும் செயல்கள் தூயனவென்றறிதல் வேண்டா. அவர்கள் தம் நன்மையைக் குறித்துச் செய்வனவே என்றறிதல் வேண்டும். அவர்கள் மறைத்துச் செய்தலே அதற்குப் போதிய சான்றாம். 'சீர்ந்தது செய்யதார் இல்' என்பது பழமொழி. (1)
|