இல்லார்க்கு - (முன்னர்ப் பெற்றிருந்து பின்னர்) உறவினரை இல்லார்க்கு, நகரமும் காடு போன்றாங்கு - நகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போல, கல்வியான் ஆய கழி நுட்பம் - நூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள், கல்லார் முன் சொல்லிய நல்லவும் தீயவாம் - நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும். (க-து.) கற்றார், கல்லார் அவையின்கண்சிறந்த பொருள்களைக் கூறாதிருக்கக்கடவர். (வி-ம்.) தீயவாய் முடிதலாவது நுண்பொருள்கள் உள்ளன, அவையிலவாய் முடிதல்.ஆசிரியர் வள்ளுவனாரும், 'அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்' என்று பயனற்றொழியு மென்பதையே குறித்தார். 'தமரையில்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி. (4) 15. கல்லா தவரிடைக்கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத(து) இல்லை ஒருவற்கு - நல்லாய் இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. (சொ-ள்.) நல்லாய் - நற்குணமுடைய பெண்ணே!, இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை - தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை - தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை, (ஆகையால்), ஒருவற்கு - கல்வியறிவு உடைய ஒருவனுக்கு, கல்லாதவரிடை - நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும்; கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை - கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை. (க-து.) கற்றார் கட்டுரை, கல்லாதாரிடைப் பொல்லாதாகவே முடியும். (வி-ம்.) தீமையைத் தருதலாவது நல்லார் கூறும் சிறந்த அறிவுரைகள் யாவற்றையும் தீயோர் தீய செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது. 'ஒழுக்கத்தின் எய்துவர்மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி'
|