பக்கம் எண் :

120

178. வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
உள்ளமாண் பில்லா ஒருவரைத் - தெள்ளி
மறைக்காண் பிரித்தவரை மாற்றா தொழிதல்
பறைக்கண் கடிப்பிடு மாறு.

(சொ-ள்.) வெள்ள மாண்பெல்லாம் உடைய - வெள்ளத்தைப் போன்று அளத்தற்கரிய மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய, தமர் இருப்ப - உறவினர்களை இருப்பக்கொண்டு, உள்ளம் மாண்பு இல்லா ஒருவரை - உள்ளத்தின்கண் மாட்சிமையில்லாத ஒருவரை, தெள்ளி - ஆராய்ந்து, மறைக்கண் பிரித்து - சூழ்ச்சிக் கண்ணின்றும் நீக்கி, அவரை மாற்றாது விடுதல் - அவரை விலக்காது விடுதல், பறைக்கண் கடிப்பு இடுமாறு - பறையின்கண் குறுந்தடியையிட்டு அடித்ததோ டொக்கும்.

(க-து.) சூழ்ச்சியின்கண் உள்ளம் மாட்சிமைப்பட்டாரைச் சேர்த்துக் கொள்க.அஃதிலாரை விலக்குக.

(வி-ம்.) பறை ஒருவன் கையாற் றன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறுங்கொண்டு சென்று யாவரையும் அறிவிக்கும். கயவரும் தாம் அறிந்த மறையைச் சுமக்கலாற்றாது இடந்தோறுஞ் சென்று வலிய அறிவிப்பர். ஆதலின்,இவரைச் சூழ்ச்சியின்கண்ணின்றும் நீக்குதல் வேண்டும்.

'பறைக்கண் கடிப்பிடு மாறு' என்பது பழமொழி.

(2)

179. அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க் கோடி மொழியற்க - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபி னல்ல துயக்கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல்.

(சொ-ள்.) தின்குறுவான் - தின்னும்பொருட்டு, கொல்வாங்கு கொன்றபின் அல்லது - கொல்லுகின்றபடியே கொன்ற பின்னர் அல்லது, உயக்கொண்டு - தப்பிப்போன பின்னர், புல்வாய் - மானினது தசையை, வழிப்படுவார் இல் - அடுதற்குரிய நெறியின்கண் நிற்றல் இலர் (அதுபோல), அன்பு அறிந்தபின் அல்லால் - தம்மாட்டு அவர் பூண்ட அன்பு அறிந்தபின்னரன்றி, யார் யார்க்கும் - யாவரே யாயினும், தம் மறை - தமது சூழ்ச்சியை, பிறர்க்கு முன் ஓடி மொழியற்க - பிறரிடம் முற்பட்டு ஓடிச் சொல்லற்க.