பக்கம் எண் :

121

(க-து.) அன்புடையாரை அறிந்தே இரகசியத்தைக் கூறுக.

(வி-ம்.) மானைக் கொன்றபின்னர் அல்லது அதன் தசையைப் பக்குவப்படுத்தும் நெறியின்கண் நில்லார். அதுபோல, பிறர் தம்மீது பூண்ட அன்பை அறிந்தபின்னர் அல்லது, அவரிடம் முற்பட்டுத் தமது மறையை மொழியலாகாது. அடுதற்குரிய நெறியின்கண் நிற்றலாகாது; காயம் முதலியன சேர்த்து அரைத்தலும் பிறவும். அவர் நிலையறியாது தமது மறையை முன்பட்டுக்கூறின் நன்மை இல்லை யாதலோடு ஒருஞான்று தீங்கு உளவாயினும்ஆம்.

'கொன்றபின் னல்லது உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல்' என்பது பழமொழி.

(3)

180. நயவர நட்டொழுகு வாரும்தாம் கேட்ட
துயவா தொழிவார் ஒருவரு மில்லை
புயலமை கூந்தற் பொலந்தொடி! சான்றோர்
கயவர்க் குரையார் மறை.

(சொ-ள்.) புயல் அமை கூந்தல் பொலந் தொடி - மேகம் போன்றமைந்த கூந்தலையும் பொன்னாலாகிய தொடியையும் உடையாய்!; நயவர நட்டு ஒழுகுவாரும் - அன்போடு பொருந்தத் தம்மோடு நட்புப் பூண்டவர்களும், தாம் கேட்டது - தாம் கேட்டறிந்த மறையை, உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை - பிறரிடம் கூறி ஆராயாது நீக்குவார் ஒருவரும் இல்லை (என்றாலும்), சான்றோர் கயவர்க்கு மறை உரையார் -அறிஞர்கள் கீழ்மக்கட்கு இரகசியத்தை உரைத்தலிலர்.

(க-து.) கீழ்மக்களிடம் இரகசியத்தைஉரைத்தலாகாது.

(வி-ம்.) கீழ்மக்களிடம் தாம் சூழ்ந்திருத்தலை உரைப்பின் அவரால் அது பரவப்பட்டு அதற்கு மாறானவை மேற்பட்டு இடையூறு பயக்குமாதலின் சான்றோர், அவரிடம் உரையார். மறை நட்டாரிடம் கூறப்பட்டு ஆராயப்படுமாயினும் கீழ்மக்களிடம் உரைத்தலாகாது என்பதாம். மறை - வெளிப்படிற் குற்றம் விளையுமென்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல்,செய்த செயல் முதலியன.

'சான்றோர் கயவர்க் குரையார் மறை' என்பது பழமொழி.

(4)