பக்கம் எண் :

122

181. பெருமலை நாட! பிறரறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று.

(சொ-ள்.) பெருமலை நாட - பெரிய மலைநாட்டை உடையவனே!, பிறர் அறியலாகா அருமறையை - பிறர் அறியக்கூடாத அரிய இரகசியத்தை, ஆன்றோரே காப்பர் - நிறைந்த அறிவுடையவர்களே வெளியிடாமல் காப்பார்கள், அருமறையை - அரிய இரகசியத்தை, நெஞ்சிற் சிறியார்க்கு உரைத்தல் - நெஞ்சாற் சிறுமைப் பட்டார்க்குக் கூறுதல், பனையின்மேல் பஞ்சி வைத்து - பனையின் மீது பஞ்சினை வைத்து, எஃகி விட்டற்று - கொட்டினாற் போலாம்.

(க-து.) அருமறையை அறிவுடையோரிடத்துக் கூறுக.அல்லாரிடத்துக் கூறற்க.

(வி-ம்.) நெஞ்சிற் சிறியார் என்றது, தாங் கேட்டதைத் தன்னுள்ளேயே நிறுக்கும் நிறையாகிய மனச்செறிவு இல்லார். ஆன்றோர் மனச்செறிவு உடையராதலின் அவரிடங் கூறுக என்றும், இவர் அஃதிலராதலின் கூறாதொழிக என்றும் கூறினார். பனை என்றது பஞ்சு கொட்டுதற் கிடனாய் நிற்பதொரு மணையை, மணையின்மீது வைத்துக் கொட்டப்படும் பஞ்சு பரந்து பல இடங்களினுஞ் சேறல் போல, நிறையில்லாரிடத் துரைத்தனவும் பரந்து பட்டுப் பலராலும் அறியப்பட்டு நிற்கும்.

'பனையின்மேல் பஞ்சி வைத்து எஃகிவிட்டது' என்பது பழமொழி.

(5)

182. விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும்.

(சொ-ள்.) அளிந்தார் கண் ஆயினும் - தம்மாட்டு அன்புடையாரிடத்தாயினும், ஆராயானாகி தெளிந்தான் - ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன், விளிந்துவிடும் - அழிந்து விடுவான், விளிந்தாரே போல - எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து, பிறராகி நிற்கும் முளிந்தாரை -அன்பின்மையின் வேறாகி நிற்கும் ஈரமற்றாரை, தஞ்சம் மொழியலோ வேண்டா - (தேறவேண்டாம் என்று) உறுதியாகச் சொல்லவேண்டுவதில்லை.