(க-து.) தம்மாட்டு அன்புடையாரிடத்தே ஆராயாது தம் மறையை வெளியிட்டார் கெடுவர் என்றால்,பிறரை நம்பலாகாது என்பது சொல்லவேண்டா. (வி-ம்.) 'இறந்தார் இறந்தார் அனையர்' என்றமையின் சினத்தின்கண் மிக்காரை 'விளிந்தார்' என்றே குறித்தார். 'சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை அற்றத்தால் தேறார் அறிவுடை யார்' என்றார் முன்னும். அன்புடையார் மாட்டேஇஃதாயின் ஏனையோரிடத்துத் தேறவேண்டா என்பதுகூறவேண்டாவாயிற்று. 'அளிந்தார்கண் ஆயினும் ஆராயானாகித் தெளிந்தான் விளிந்துவிடும்' என்பது பழமொழி. (6) 20.தெரிந்து செய்தல் 183. ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான் தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே தாஅம் தரவாரா நோய். (சொ-ள்.) உலகம் ஆண்டவன் - உலகத்தினை அரசுசெய்த மாவலி, மே(வு)ம் துணையறியான் - தன்னோடு பொருந்தியிருக்கும் அமைச்சன் கூறியவற்றை அறியாதவனாய், எனக்கு எளிது ஆம் என்று - மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லி, மிக்கு - செருக்கின்கண் மிக்கு, நீர் பெய்து - தானமாக நீர்வார்த்துக் கொடுத்து, இழந்தான் - உலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்), தோம் உடைய தொடங்குவார்க்கு - குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்கு, தாம் தர வாரா நோய் இல்லை - தாமே தமக்குத் தேடவாராத துன்பங்கள் இல. (க-து.) குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார் தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர். (வி-ம்.) துணையறியான் என்றது சுக்கிரன் 'கண்ணன் வஞ்சநெஞ்சன்; நினது செருக்கை அடக்க வந்து நிற்கின்றான்.
|