பக்கம் எண் :

124

ஆதலின், அவனுக்கு மூவடியும் கொடா தொழிக' என்று கூறித்தடுக்கவும் அறியானாய் என்றபடி. மாவலி உலகத்தை யிழந்தமையால் தனக்குக் கேடு தானே தேடிக்கொண்டானாகின்றான். ஆகவே, குற்றமுடைய காரியத்தைத் தொடங்குவார் தமக்கு வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையும் தாமே விளைத்துக் கொள்வர்என்பதாயிற்று.

உலகிழந்தமை : கண்ணன் பேருருவங்கொண்டுஈரடியால் உலகத்தை அளந்து மற்றோரடிக்கு இடமின்மையால்அவனது தலையின்மீதே வைத்தளந்தான் என்பது,

'ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்'

என்பது பழமொழி.

(1)

184. நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
சொற்சோரா தாரோ இலர்.

(சொ-ள்.) கல்பால் இலங்கு அருவி நாட - மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!, நற்பால கற்றாரும் - நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும், நாடாது சொல்லுவர் - (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள், இற்பாலர் அல்லார் - நல்ல - குடியின்கட் பிறவாதார், இயல்பின்மை நோவது எவன் - (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எதுபற்றி?, யாரானும் - யாவரே யாயினும், சொல் சோராதாரோ இலர் - சொல்லின்கண் சோர்வுபடாதார்இலர்.

(க-து.) யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான் கருத்து ஒன்றனையே நோக்குக.

(வி-ம்.) எவன் என்பது என் என்றாயது, நல்லன கூறுதற்கும் அல்லன கூறுதற்கும் குடிகாரணமாயிற்று.

'காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்' என்பது திருக்குறள்.

நல்ல குடிப்பிறந்தார் சொற்சோர்வு படார்; சில நேரங்களில் அவரும் உலக வாசனையால் சோர்வுபடுதலின் யாவர்மாட்டும் கருத்தொன்றனையே நோக்குகஎன்பதாயிற்று.

'யாரானும் சொற் சோராதாரோ இலர்' என்பது பழமொழி.

(2)