185. பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன் கொண்டதனை நாணி மறைத்தலால் தன்கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல். (சொ-ள்.) பூ தன் புனல் புகார் - அழகிய குளிர்ந்த நீரை உடைய புகாரின்கண் உள்ள, பூமி குறி காண்டற்கு - பூமியது அளவை அறியும்பொருட்டு, வேந்தன் - சோழவரசன், மாந்தரை வினாயினான் - மக்களைக் கேட்டான், சான்றவன் - அறிவு சான்ற ஒருவன், கொண்டதனை நாணி மறைத்தலால் - ஒருவன் களவினால் ஆண்டுவருகின்ற நிலத்தை எடுத்துக் கூற நாணி அதனை மறைத்து இத்துணையென்று வரையறுத்துக் கூறினானாதலால், தன் கண்ணிற் கண்டதும் - தன் கண்ணாற் கண்டு தெளிய அறிந்ததனையும், எண்ணி சொலல் - ஆராய்ந்து சொல்லுக. (க-து.) கண்ணாற் கண்டவற்றையும் அவற்றது நன்மை தீமை கூறுபாடு அறிந்தே கூறுக. (வி-ம்.) சான்றவன் பிறன் களவினால் நிலங்கொண்டு ஆள்வதை அறிவானாயினும், அறிந்ததைக் கூறின் களவுபுரிந்து வாழும் அவற்கு இறுதி வருமென்றெண்ணி அதனை மறைத்துக் கூறி அவனைப் பிழைப்பித்தான். ஆகவே, இவன் தான் கண்டதனை ஆராய்ந்து தீமை இலதாகக் கூறினான். எண்ணிச் சொலல் என்றது பிறவுயிர்க்குத் தீங்கு பயப்பதாயின் அதனைக் கூறாதொழிதல்,நன்மை பயப்பதாயின் அதனைக் கூறுதல் என்ற கூறுபாடுகளைஆராய்ந் துரைத்தலை. 'தன்கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல்' என்பது பழமொழி. (3) 186. ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள் இருவ ரிடைநட்பான் புக்கால் - பெரிய வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் தலையுள் குறுக்கண்ணி யாகி விடும். (சொ-ள்.) ஒருவன் உணராது - ஒருவன் ஆராயாது, உடன்று எழுந்த போருள் - மாறுபட்டுச் சினந்து எழுந்தபோரின் கண், இருவர் இடை நட்பான் புக்கால் - அவ்விருவருக்கும் இடையே நட்பாக்கும்பொருட்டுப் புகுந்தால், பெரிய வெறுப்பினால் போர்த்து செறுப்பின் - தன் சொற்களைக் கேளாது மிக்க
|