வெறுப்பினால் மீண்டும் போர் தொடுக்கும் உள்ளத்தராயின், தலையுள் குறுக்கண்ணியாகிவிடும் - எருதின் தலையிலுள்ள குறிய கயிற்றைப்போல் திருத்த முடியாதாம். (க-து.) தன்சொல் கேளாதவரைத் திருத்தப் புகலாகாது. (வி-ம்.) குறுங்கண்ணி - குறுக்கண்ணி என வலித்தது. எருதின் தலையில் கட்டியிருக்கும் குறிய கயிற்றை அச்சத்தால் திருத்தமுடியாதவாறுபோல் தன் சொற்களைக் கேளாதார்பூண்ட பகைமையும் திருத்தமுடியாதாம். 'தலையுள் குறுக்கண்ணியாகிவிடும்' என்பது பழமொழி. (4) 187. எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின் தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப! பனைப்பதித் துண்ணார் பழம். (சொ-ள்.) இனம் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப - இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே எனைப் பலவேயாயினும் - எத்துணைப் பலவேயாயினும், சேய்த்தாற் பெறலின் நெடுநாட்களுக்குப்பின் பெறுதலைவிட, தினைத்துணையேயானும் - தினையளவிற்றாயினும், அணிக்கோடல் நன்று - அணித்த நாட்களுக்குள் பெறுதல் நல்லது, பனைபதித்து உண்ணார் பழம் - பனம்பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லையாதலான். (க-து.) பயன் சிறியதேயாயினும் அணித்தே வருவதைக் கொள்க. (வி-ம்.) சேய்த்து, அணி காலங்களை உணர்த்தி நின்றன. பனம்பழம் ஒன்று கிடைக்குமானால் இதனை நட்டு வைத்து அது பழுத்த பின்னர் மிகுதியும் உண்போம் என்று கையிலுள்ள பழத்தை நட்டுவைத்து இழப்பார் யாருமிலர், பெற்ற அப்பொழுதே அதனை உண்பர். ஆகவே, நெடுங்காலத்தின் பின்வரும் பெரும்பயன் நோக்கி அண்மையில் கிடைத்த சிறுபயனை இழத்தால் கூடாது என்பதாயிற்று. பயன் அளவு நோக்காது கால அளவு நோக்குக என்பதாம். பெரும்பயன் வருந்துணையும் உயிருடன் இருத்தல் அருமையாதலின், 'அணிக்கோடல் நன்று'என்றார். 'பனைப் பதித் துண்ணார் பழம்' என்பது பழமொழி. (5)
|