முடம் என்ற பெயரோடு வேறு பெயர்களையும் அடைதலால், (அத்தகைய நெறியின்கண்), போகார் -அறிவுடையார் செல்லுதலிலர். (க-து.) தம்உயிர்க்கு ஏதம்பட வருவனசெய்யாதொழிக. (வி-ம்.) புகலை ஒழித்துப் போகார் என முடித்துக்கொள்க. கடுப்ப என்றது முதல் பெறுதலால் என்பது வரை செல்லலாகா நெறியின் கண் செல்வார் அடைதற்குரியன. ஆகவே அறிவுடையோர் அந்நெறியிற் செல்லுதலிலர் என்பதாம். செல்லலாகா நெறியாவது நீர் மிக்கும் பாறை மிகுந்தும் விரைவு மிகுந்தும் இருக்கும் சிறுநெறி. இதன்கட் சென்றார் தலைகிழிதல், கால் முடம் படுதல் முதலியன பெறுவர். அறிவுடையோர் நல்ல வழியை விட்டு உயிர்க்கிறுதி தரும் வழியிற் செல்லாரென்று தம் உயிர்க் கிறுதிதரும் தீயசெயல்களைச் செய்தலாகாது என்பதனைக் குறித்தார். இங்ஙனம் கருத்தைக் கூறாது பிறிதொன்றனைக் கூறிப் பெறவைத்தலும் அணிவகையுள் ஒன்றாம். பிறிதாகப் பெறுதல் என்றது குருடு, செவிடு போல்வன. இச் செய்யுள் முழுவதும் பழமொழிப் பொருள். (7) 190. சிறிதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார் பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம் இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும். (சொ-ள்.) அரிதாம் இடத்துள் - பெறுதற்கரிய இடத்துள் ஒருவன் இருப்புழி பெற்றால் - ஒருவன் இருக்க இடம் பெற்றால், கிடப்புழியும் பெற்றுவிடும் - படுத்தற்குரிய இடத்தையும் பெற்றுவிடுவான்; (அதுபோல), செல்வரைச் சேர்ந்தார் - செல்வரை அடைந்தவர்கள், சிறிதாய கூழ் பெற்று - முன்னர்ச் சிறிய அளவிற்றாய கூழினைப் பெற்று, பெரிதாய கூழும் பெறுவர் - பின்னர் மிகுந்தஅளவிற்றாய உணவினையும் பெறுவர். (க-து.) தக்கவர்களைச் சார்ந்தொழுகின் மிகுந்த பயனைஅடையலாம். (வி-ம்.) இருக்க இடம் பெற்றான் படுக்க இடமும் பெற்றதுபோல, செல்வரைச் சார்ந்து ஒழுகுவார் முன்னர் மிகச் சிறிய உணவு பெறினும், பின்னர்ப் பெரியதாய உணவினைப் பெறுவர் ஆகவே, தக்க இடத்தைச் சார்ந்தொழுகவேண்டும். 'இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும்' என்பது பழமொழி. (8)
|