பக்கம் எண் :

129

191. புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
இன்சொல் இடர்ப்படுப்ப தில்.

(சொ-ள்.) ஒருவனை - ஒருவனை, புன்சொல் இடர்ப் படுப்பதல்லால் - வன்சொல் இடருட் படுத்துவதல்லது, இன்சொல் இடர்ப்படுப்பது இல் - இனியசொல் இடருட் படுத்துவது இல்லை. (ஆகவே), புன் சொல்லும் நன் சொல்லும் பொய்யின்று உணர்கிற்பார் - இன்னாத சொல்லாலும் இனிய சொல்லாலும் வரும் பயனைக் குற்றமின்றி அறியவல்லார், வன்சொல் வழியராய் - வன்சொற் சொல்லி அதன் வழியே ஒழுகுபவராய், வாழ்தலும் உண்டாமோ - வாழ்ந்திருத்தலும்உண்டோ.

(க-து.) இனிய சொற்களைச் சொல்லுக.

(வி-ம்.) வன்சொல் தன்னை உடையானை இடர்ப்படுத்துதல் நோக்கிப் புன்சொல்எனப்பட்டது.

'உணர்கிற்பார்' என்றது இன் சொல்லால் நன்மை விளைதலையும் வன் சொல்லால் தீமை விளைதலையும் அறிவார் என்றபடி. இரண்டனது கூறுபாடுணர்வார் வன்சொற் கூறுதலும்உண்டுகொலோ வென்றார்.

'இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது'

என்றதன் விரிவே இச்செய்யுள்.

'இன்சொல் இடர்ப்படுப்பதில்' என்பது பழமொழி.

(9)

192. மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆக அவரவர்
தந்நீர ராதல் தலை.

(சொ-ள்.) மெய் நீரர் ஆகி விரிய புகுவார்க்கும் - உண்மையான நீர்மையை உடையராகித் தமது குண மேம்பாடுகள் விரிந்து நிற்கக் காரியத்தின்கண் புகுகின்றவர்களுக்கும், பொய் நீரர் ஆகி பொருளை முடிப்பார்க்கும் - பொய்ம்மையான நீர்மை உடையராகித் தாங் கருதிய பொருளை முடிப்பார்க்கும், எந்நீரர்ஆயினும்