பக்கம் எண் :

13

என்றலின், ஒழுக்கத்தினும் இழுக்கத்தினும் உயர்வு இழிவு இல்லை என்றார். (1). 'இழுக்கத்தின் மிக்க இழிவில்லை' (2) 'ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை' - இவை இச் செய்யுளிற் கண்ட பழமொழிகள்.

(5)

16. கற்(று)ஆற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொல்தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப்(பு)ஊணி
யானையோடு ஆடல் உறவு.

(சொ-ள்.) கல்லாதார் - அறியாதவர்கள், கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து - நூல்களைக் கற்று (அவைகளிற் கூறியபடி) செயலிற் செய்வாரைக் கோபமூட்டி, சொல்தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - சொற்களைக் கொழித்துக்கொண்டு (மன எழுச்சியால் அவரோடு மாறுகொண்டு) மிக்கு எழுதல், எற்று எனின் - எத்தன்மைத்தெனின், தானும் நடவான் முடவன் - தானும் நடக்கமுடியாதவனாகிய காறகூழையன், பிடிப்பு ஊணி - ஊன்றுகோலை ஊன்றி, யானையோடு ஆடல் உறவு -யானையோடு விளையாடல் உறுதலோடு ஒக்கும்.

(க-து.) கல்லார் கற்றாரோடு வாதஞ்செய்யின் அவமானம் அடைவர்.

(வி-ம்.) முடவன் உயிர் இழப்பான், கல்லார் அவமானம் அடைவர். தாற்றுதல் - கொழித்தல், ‘தாற்றுதல்' என்பது தாத்தல் என வழக்கில் வழங்கிவருகிறது. பிடிப்பு ஊணி - பற்றுக்கோடாக ஊன்றப்படுவது. (ஊன்றுகோல்) ஊன்றப்படுவது - ஊணி. இதுவழக்கில் ஊணுதல் என்று வழங்கப்படுகிறது.

'முடவன் பிடிப்பு ஊணி யானையோடாடல் உறவு -' இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

(6)

3.அவையறிதல்

17. கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர் அவை.

(சொ-ள்.) வேட்கையால் வண்டு வழிபடரும் வாள் கண்ணாய் - (காம) விருப்பினால் (கண்களைப்பெடை வண்டுகள் எனக் கருதி)