நிறைந்த செல்வத்தினை யுடையார்; அத்தகையோரையும் தீங்கோர்ப்பர் என உயர்ந்ததற் கொன்று காட்டியவாறு. நெடுவேல் தொலைத்தான், குடத்துள்வேல் இருக்க முடியாமையை அறியாது தேடினமை போல, ஐயுற வேண்டாத தேவர்களையும் ஐயுறுவர் பொருளினைஇழந்தார். 'நாடி விடும் :' விடும் என்பது துணைவினையாய் நாடுவான் என்றே பொருள்பட்டு நின்றது. 'நெடுவேல் கெடுத்தான் குடத்துளு நாடிவிடும்' என்பது பழமொழி. (11) 194. துயிலும் பொழுதத் துடைவூண்மேற் கொண்டு வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி அயில்போலுங் கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி மயில்போலுங் கள்வ ருடைத்து. (சொ-ள்.) அயில் போலும் கண்ணாய் - வேலினை ஒக்கும் கண்களை உடையாய்!, துயிலும் பொழுதத்து - பித்தரும் உறங்குகின்ற அரையாமத்தில், உடைவு - கதவு முதலியனவற்றைத் தகர்த்தல் செய்து, ஊண் மேற்கொண்டு - அக்களவான் வரும் உணவினை உண்ணுதலே தொழிலாகக் கொண்டு, வெயில் விரி போழ்தின் - ஞாயிறு எழுந்து வெயில் விரிந்த பொழுதின்கண், வெளிப்பட்டார் ஆகி - உறக்கம் நீங்கி வெளியே தோன்றினவர்களாகி, அடைந்தார்போல காட்டி - எல்லார்க்கும் தாம் நட்டார் போன் றறிவித்து (நிற்கும்), மயில் போலும் கள்வர் - மயிலைப் போன்ற கள்வர்களை, உடைத்து - உடைத்தாயிரா நின்றதுஇவ்வுலகம். (க-து.) வஞ்சக் கள்வரை மிக உடையது இவ்வுலக மாதலால் அவரை யறிந்து தம்மைப் பாதுகாக்கஎன்பதாம். (வி-ம்.) 'வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி' என்பது யாரும் தம்மை ஐயுறாதவாறு ஞாயிறு தோன்றியபின் தோன்றுவர் என அவரது விரகினைக் குறித்தவாறு. 'மயில் போலும்' என்றது பாம்பினை விழுங்கிக் கண்டார்க்கு அடக்கம் உடைத்தாம்படி தோன்றும் மயில்போல் என்றவாறு. இவரும் அதுபோல, கொடியசெயல்களைச் செய்து தூய்மையுடையார் போன்று தோன்றுவர்என்பதாயிற்று. 'மயில்போலுங் கள்வர்' என்பது பழமொழி. (12)
|