195. செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது நில்லற்க நீத்தார் நெறியொரீஇப் - பல்காலும் நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே ஓடுக ஊரோடு மாறு. (சொ-ள்.) சேர்ந்தார் - தம்மை அடைக்கலமாக அடைந்தார், புலம்பு உற - துன்புற்று அவலிக்குமாறு, செல்லற்க - தீயவழியில் செல்லா தொழிக, நீத்தார் நெறி செல்லாது ஒரீஇ நில்லற்க - இருவகைப் பற்றினையும் நீத்தார் அறிவுறுத்திய நெறியின்கண் செல்லாது அதனைவிட்டு நில்லாதொழிக, தான் கண்ட நுட்பத்தை - தான் ஆராய்ந்து அறிந்த நுண்ணிய பொருளை, பல்காலும் - பலமுறையும், நாடுக - ஆராய்க, ஊர் ஓடுமாறு - உலகத்தார் செல்கின்ற நெறியின்கண்ணே, கேளாதே ஓடுக - யாரையும் வினவுதலின்றிச்செல்க. (க-து.) (1) தம்மை அடைக்கலமாக அடைந்தாரைத் துன்புறுத்தலாகாது. (2) துறவிகள் அறிவுறுத்திய நெறியில் ஒழுகல் வேண்டும். (3) தான்கண்ட நுட்பத்தைப் பலகாலும் ஆராய்க. (4) உலகத்தோ டொத்து வாழ். (வி-ம்.) நீத்தார் அறிவுறுத்திய நெறியாவது இல்லற துறவற நெறியின்கண் நின்று இம்மை, மறுமை இன்பங்களைத் தவறாது அடைதற்கு அவராணையாகக்கூறிய நூல்களாம். தம்மை அடைக்கலமாக அடைந்தார் துன்புறும் நெறியில் ஒழுகுதல் பாவங்களுள் தலையாயது என்பார் செல்லற்க என்றும், நீத்தார் அறிவுறுத்திய நெறியின்கண் செல்லாதொழியின் இம்மை மறுமை இரண்டினும் துன்பமெய்தி எற்று எற்று என்று இரங்குவராதலின் 'நெறி ஒரீஇ நில்லற்க' என்றும், ஆராயுந்தோறும் இன்பம் இடையறா தீண்டுதலோடு, மேலும் பல நுட்பங்கள் தோன்றுதலில் 'பல்காலும் நாடுக' என்றும், புத்தேளுலகத்தும் இவ்வுலகத்தும் ஒப்புரவுபோற் சிறந்ததொன் றின்மையின் அதனை வினவுதல் செய்யாது விரைந்து செய்க என்பார் 'கேளாதே ஓடுக' என்றுங் கூறினார். (13)
|