பக்கம் எண் :

135

199. அருளுடை யாருமற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதா ரில்லை
பொருபடைக் கண்ணாய்! அதுவே திருவுடையார்
பண்டம் இருவர் கொளல்.

(சொ-ள்.) பொரு படைக் கண்ணாய் - போரிடுகின்ற வேல்போன்ற கண்ணை உடையாய்!, அருள் உடையாரும் - அருளினை உடைய பெரியோர்களும், அல்லாதவரும் - சிறியவர்களும், பொருள் உடையாரை - செல்வமுடையாரை, புகழாதார் இல்லை - புகழ்ந்து பேசாதார் இலர் (எல்லோரும் புகழ்வர்), அதுவே - அங்ஙனம் புகழ்தலே, திரு உடையார் பண்டம் - புண்ணியமுடையார் விற்கும் பொருளை, இருவர் கொளல் - இருவர்மாறுபட்டுக் கொள்ளுதலை ஒக்கும்.

(க-து.) பொருள் உடையாரை எல்லோரும்புகழ்வர்.

(வி-ம்.) புண்ணிய முடையார் பண்டத்தைப்பலரும் போட்டியிட்டுக் கொள்ளுதல்போல,பொருளுடையாரைப் பலரும் போட்டியிட்டுப் புகழ்வர்.

அருளுடையார் இப்பொருளைப் பெறஇவர் என்ன புண்ணியஞ் செய்தாரோ வென அவர் செய்தநல்வினை நோக்கிப் புகழ்வர். அல்லாதார் அவரால்வரும் பயன் நோக்கிப் புகழ்வர். இருவர் என்றதுஒருவர் அல்லர் பலர் என்பதைக் குறிப்பித்தது.

திருவுடையார் பண்டம் இருவர்கொளல் என்பது பழமொழி.

(4)

200. உடையதனைக் காப்பான் உடையான் அதுவே
உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையின்
புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்.

(சொ-ள்.) அடையின் - சென்றடையுமாகில், புதற்கு - காட்டிற்கு, புலியும்வலியே - புலியும் பாதுகாவலாம், புலிக்கு - புலிக்கு, புதலும் வலியாய் விடும் - காடும் பாதுகாவலாய் நிற்கும், (அதுபோல), உடையதனை - தன்னிடத்திலுள்ள பொருளை, காப்பான் - இடையூறுபடாது காப்பாற்றுகின்றவனே, உடையான் - பொருள் உடையா னெனப்படுவான், அதுவே - அப்பொருள் தானே, உடையானை - தன்னையுடையானை, காப்பதூஉம் ஆகும் - இடையூறு உறாமற் காப்பாற்றுகின்றதாகும்.