(க-து.) பொருளை ஒருவன் காப்பாற்றினால் அவனைப் பொருள்காப்பாற்றும். (வி-ம்.) வலி என்பது இருவழியும் வலிமைக்கு ஏதுவாகிய பாதுகாவல் என்னும் பொருளைப் பயந்துநின்றது. புதல் என்பது ஈரிடத்தும் புதல்கள் நெருங்கியுள்ள காடு எனக் காட்டின் மேல் நின்றது. புதல் -புல்பூண்டுகள். 'புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும்' என்பது பழமொழி. (5) 201. வருவாய் சிறிதெனினும் வைகலு மீண்டின் பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவா றொளியீண்டி நின்றால் உலகம் விளக்கும் துளியீண்டில் வெள்ளந் தரும். (சொ-ள்.) ஒளி ஈண்டி நின்றால் - விண்மீன்கள் ஒன்றுகூடி நின்றால், ஒருவாறு உலகம் விளக்கும் - ஒருவகையாக இருள் நீங்க உலகத்தினை விளங்கச்செய்யும், துளி ஈண்டில் - மழைத்துளிகளும் இடைவிடாது ஒன்றுசேரில், வெள்ளம் தரும் - கடலைப்போல் மிகுந்த நீரைத் தரும். (அவைபோல), வருவாய் சிறிது எனினும் - (ஒருவனுக்கு) பொருள் வருவாய் சிறிதாயினும், வைகலும் ஈண்டின் - நாடோறும் சோர்வின்றிச் சிறிதாயினும் சேர்த்து வைப்பின், பெரிதும் பெருவாய்த்தாய் நிற்கும் - மிகவும் பெரிய அளவினை உடையதாக ஆகும். (க-து.) வருவாய் சுருங்கியதாயினும் நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்த்துவைத்தால் செல்வம் வளர்ந்து பெரிதாகும். (வி-ம்.) வருவாய் - வரவுகட்கான வேது; இது வருகின்ற பொருள்மேல் நின்றது. ஒருவாறு என்றது 'பாயிருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும் காய்கலா வாகும் நிலா' என்பதைக் கருதி. 'ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும், துளியீண்டில் வெள்ளம் தரும்' என்பன பழமொழிகள். (6) 202. உள்ளூ ரவரால் உணர்ந்தாம்முதலெனினும் எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா தழுங்கல் முதுபதி அங்காடி மேயும் பழங்கன்றே றாதலும் உண்டு.
|