பக்கம் எண் :

137

(சொ-ள்.) இலங்கு இழாய் - விளங்குகின்ற இழையினை உடையாய்!, அழுங்கல் முதுபதி - ஒலியினையுடைய பழைய நகரில், அங்காடி - கடைத்தெருவின்கண், தள்ளாது மேயும் பழங்கன்று - நடக்கமுடியாது நடந்து மேய்கின்ற பழைய கன்று, ஏறு ஆதலும் உண்டு - வலிய எருதாதலும் உண்டு. (ஆதலால்), முதல் - ஒருவனுக்கு முதலாக இருக்கின்ற பொருளது சிறுமையை, உள்ளூரவரால் உணர்ந்தாம் எனினும் - அவனது ஊரின் கண் வாழ்பவரால் ஐயமின்றி அறிந்தோமாயினும், எள்ளாமை வேண்டும் - அவனைப் பொருளிலான்என்று இகழா தொழிதல் வேண்டும்.

(க-து.) பொருள் சிறிதுடையார் என்றுயாரையும் இகழற்க.

(வி-ம்.) 'உள்ளூரவரால்' என்றது அவரது பொருளின் அளவை உள்ளூரில் வாழ்வார் நன்கு அறிவாராதலால் அவர்களால் ஐயமின்றித் தெளிய அறிந்தார் என்றபடி. 'பழங்கன்று' என்றது உடல் இளைப்பால் பழைமையாகவும் வயதால் இளமையாகவும் இருத்தல்நோக்கி. நடந்துசெல்ல முடியாத கன்றும் வலிய ஏறாதல்போல, சிறிய முதலுடையாரும் பெரிய செல்வந்தராத லுண்டு.ஆதலின் சிறிமைநோக்கி இகழற்க.

'பழங்கன்றே றாதலும் உண்டு' என்பது பழமொழி.

(7)

203. களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! அறுமோ
நரிநக்கிற் றென்று கடல்.

(சொ-ள்.) விளைநெல் அரிநீர் அணைதிறக்கும் ஊர - விளைந்த நெல்லை அறுக்கும் பொருட்டு உழவர்கள் நீர் வடிய வடிகாலைத் திறக்கும் மருதநிலத் தலைவனே!, நரி நக்கிற்று என்று கடல் அறுமோ - நரி நக்கியது காரணமாகக் கடல்நீர் வற்றுதலுண்டோ (இல்லை). (அதுபோல), களமர் பலரானும் - ஏவல்செய்வார் பலராலும், கள்ளம் படினும் - களவு செய்யப்படினும், வளம் மிக்கார் செல்வம் - பொருள் வருவாய் மிகுதியும் உடையாரது செல்வம், வருந்தா -குறைந்து வருந்துதலில்லை.

(க-து.) பொருள் வருவாய் மிக உடையார், களமர் களவு செய்ததால் செல்வம் குறைந்து வருந்தார்.