பக்கம் எண் :

138

(வி-ம்.) பெருநெருப்புக்கு ஈர மில்லாததுபோல, வருவாய் மிக உடைமையால் களவு செய்யப்பட்ட இச் சிறுபொருள் ஒருகுறைவாகத் தோன்றுதலில்லை.

'அறுமோ நரி நக்கிற்று என்று கடல்' என்பது பழமொழி.

(8)

204. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து
வாடிய காலத்தும் வட்குபவோ? - வாடி
வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும்
புலித்தலையை நாய்மோத்தல் இல்.

(சொ-ள்.) வாடி - உணவு பெறாமையால் வாட்டமுற்று, வலித்து - நரம்புகள் வலித்து, திரங்கி - உடல் சுருக்கத்தையடைந்து, கிடந்தேவிடினும் - முதுமையால் படுத்தே கிடப்பினும், புலித்தலையை - அங்ஙனம் கிடைக்கும் புலியது தலையை, நாய் மோத்தல் இல் - நாய் சென்று மோந்துபார்த்தல்கூட இல்லை, (ஆகையால்) நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் உலகத்தாரால் அறியப்பட்ட மிகுந்த செல்வத்தினை யுடையார், நல் கூர்ந்து - வறுமை யுற்று, வாடிய காலத்தும் - தளர்ந்த இடத்தும், வட்குபவோ - பிறருக்குத் தாழ்வாகத் தோன்றுவரோ? தோன்றார்.

(க-து.) பெருஞ்செல்வ முடையார் தம் செல்வம் சுருங்கியவிடத்தும் பிறருக்குத் தாழ்வாகத் தோன்றார்.

(வி-ம்.) புலி செயலற்றுக் கிடந்ததாயினும் நாய் அதனை மோந்து பார்த்தல்கூடச் செய்யாததுபோல், பெருஞ்செல்வர் செல்வ மிழந்து வருந்தினாராயினும் தீயோர் அவர்க்குத் தீமை செய்யும்பொருட்டு நெருங்கஅஞ்சுவர்.

'வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும்
புலித்தலையை நாய் மோத்தல் இல்' என்பது பழமொழி.

(9)

22.பொருளைப்போற்றுதல்

205. தந்தம் பொருளும்தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
நந்துநீர் கொண்டதே போன்று.