பக்கம் எண் :

139

(சொ-ள்.) அம் தண் அருவி மலை நாட - அழகிய குளிர்ந்த அருவிகளை உடைய மலைநாடனே!, சேண் நோக்கி - கால நெடுமையை நோக்கி, நந்து - நத்தை, நீர் கொண்டது போன்று - நீரைத் தன்னிடத்தே பாதுகாத்துக்கொண்டதுபோல, தம் தம் பொருளும் - தத்தமது பொருளையும், தமர்கண் வளமையும் - தம் சுற்றத்தாரிடத்துள்ள செல்வத்தையும், முந்துற நாடி - முற்படவே ஆராய்ந்து, புறந்தரல் - பின்னாளில் உதவும் பொருட்டு, ஓம்புக -பொருளினைச் சேமித்துக் காவல்செய்க.

(க-து.) பின்னாளில் உதவும் பொருட்டுப்பொருளினைச் சேமித்துக் காவல் செய்க.

(வி-ம்.) நத்தை எதிர்காலத்தை நோக்கி நீரைச் சேமித்துக் காவல்செய்வதுபோல, பிற்காலம் நோக்கிப் பொருளினைக் காவல் செய்தல் வேண்டும். 'தந்தம் பொருளும் தமர்கண் வளமையும் முந்துற நாடி' என்றது ஒவ்வொருவனும் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையுமாவது காப்பாற்றுதல் வேண்டும் என்னும் கடப்பாடு நோக்கி,

'சேணோக்கி நந்துநீர் கொண்டதேபோன்று' என்பது பழமொழி.

(1)

206. மறந்தானும் தாமுடைய தாம்போற்றி னல்லால்
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
இறந்தது பேர்த்தறிவார் இல்.

(சொ-ள்.) கறங்கு நீர்க்கால் - ஒலிக்கின்ற நீரை உடைய உப்பங்கழிகள், அலைக்கும் - அலைவீசுதற் கிடனாய, கானல் அம் சேர்ப்ப - கடற்கரைச் சோலையை உடைய அழகிய கடல் நாடனே!, இறந்தது - தமது கையினின்றும் போய பொருளை, பேர்த்து அறிவார் இல் - மீட்டுத்தர அறிவாரில்லையாதலால், தாம் உடைய - தம்மிடத்துள்ள பொருளை, தாம் போற்றின் அல்லால் - தாம் காவல் செய்யின் அல்லது சிறந்தார் தமர் என்று - தமக்குச் சிறந்தார் எனவும், உறவினர் எனவும் கருதி, தேற்றார்கை - நம்பலாகாதார் கையின்கண், மறந்தானும் வையார் - ஒருகால்மறந்தும் வைத்தல் இலர் அறிவுடையார்.

(க-து.) ஒவ்வொருவரும் தந்தம் பொருளைத் தாமே பாதுகாத்தல் வேண்டும்.