(வி-ம்.) போனபொருளை மீட்டும் பெறுதல் அரிதாகலான், உள்ளபொருள் கைவிட்டுப் போகாதவண்ணம் தாமேகாவல் செய்தல் வேண்டும். 'இறந்தது பேர்த்தறிவார் இல்' என்பது பழமொழி. (2) 207. அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால் இமையாது காண்பினும் ஆகா - திமையோரும் அக்காலத் தோம்பி அமிழ்துகோட் பட்டமையால் நற்காப்பின் தீச்சிறையே நன்று. (சொ-ள்.) இமையோரும் - தேவர்களும், அக்காலத்து - முற்காலத்து, ஓம்பி - பாதுகாத்தும், அமிழ்து கோட்பட்டமையால் - அமிர்தம் கருடனால் கொள்ளப்பட்டமையால், நல் காப்பின் தீச்சிறையே நன்று - நன்றாகக் காவல் செய்தலினும் யாரும் நெருங்கமுடியாத தக்க இடத்தின்கண் வைத்துக் காவல் செய்தலே நல்லது. (ஆதலால்), அமையா இடத்து - பொருந்தாத விடத்து, ஓர் அரும் பொருள் வைத்தால் - ஓர் அரிய பொருளை வைத்தால், இமையாது காப்பினும் - கண்ணிமையாது காவல் செய்யினும், ஆகா - காவல் செய்ய முடியாதாம். (க-து.) பொருளை, யாரும் நெருங்கமுடியாததக்க இடத்தின்கண் வைத்துக் காவல் செய்தல் வேண்டும். (வி-ம்.) சிறை என்றது சிறை செய்யப்படும் இடத்தினை, அதற்குத் தீமையாவது யாரும் நெருங்க முடியாமையாம். இமையாது நோக்கும் இமையவர் பாதுகாத்தும் அமிர்தம் கோட்பட்டது என்ற தீச்சிறையின் இன்றியமையாமை குறிப்பிடப்பட்டது. அமிழ்து கோட்பட்டமையாவது, கருடன் தன் தாயின் அடிமையை நீக்கும் பொருட்டுத் தேவர்கள் அமராவதியின் கண் வைத்துக் காவல் செய்த அமிர்தத்தைத் தன் வலிமையால் கொண்டுசென்றான் என்பது. 'நற்காப்பின் தீச்சிறையே நன்று' என்பது பழமொழி. (3) 208. ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல் போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப காக்கையைக் காப்பிட்ட சோறு.
|