(சொ-ள்.) போக்கு இல் நீர் - வடிவாய் இல்லாத கடல், தூஉம் - நீர்த்துளிகளைத் தூவுகின்ற, பொரு கழித் தண் சேர்ப்ப - கரையினைப் பொருகின்ற உப்பங்கழிகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே!, ஒருவர் ஊக்கி உழந்து ஈட்டிய ஒண்பொருளை - ஒருவர் முயன்று வருந்தித் தேடிய ஒள்ளிய பொருளை, நோக்குமின் என்று - காவல் செய்தலை இகழ்ந்து, நொவ்வியார் கைவிடுதல் - கீழ்மக்களிடத்து ஒப்புவித்தல், காக்கையை காப்பு இட்ட சோறு - காக்கையைக் காவலாக வைத்த சோற்றினைஒக்கும். (க-து.) காத்துத்தருமாறு கீழ்மக்களிடம் ஒப்புவித்த பொருளைப் பின்னர்ப் பெறுதல் அரிதாம். (வி-ம்.) கடலைப் 'போக்கில் நீர்' என்றார், வருவாயேயன்றி வடிவாய் இன்மையால். காக்கையைக் காவலாக வைத்த சோற்றினைப் பிறகு பெறுதல் அரிதாதல் போல, கீழ்மக்களிடம் காவலாக ஒப்புவித்த பொருளையும் திரும்பப் பெறுதல் அரிதாம். 'காக்கையைக் காப்பிட்டசோறு' என்பது பழமொழி. (4) 209. தொடி முன்கை நல்லாய்! அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல் வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப மூரியைத் தீற்றிய புல். (சொ-ள்.) தொடி முன்கை நல்லாய் - வளையல் பொருந்திய முன் கையையுடைய நல்லாய்!, கடி நெய்தல் வேரி கமழும் - புதிதாக அலர்ந்த நெய்தலது நறுநாற்றம் கமழுகின்ற, விரி திரை தண் சேர்ப்ப - விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல்நாடனே!, அ தொக்க பொருளை - முயன்று வருந்திச் சேர்த்த அத்திரண்ட பொருளை, குடிமகன் அல்லான் கை வைத்தல் - நற்குடியிற் பிறந்த மகன் அல்லாதவனிடத்து வைத்தல், மூரியை தீற்றிய புல் - கிழவெருதை உண்பித்த புல்லோ டொக்கும். (க-து.) நற்குடிப் பிறவாரிடத்து வைத்த பொருள்பயன்படுதலில்லை. (வி-ம்.) கிழ வெருதினை உண்பித்த புல் பயனற் றொழிதல்போல, நற்குடிப் பிறவாரிடத்து வைத்த பொருளும் தமக்குப் பயனற் றொழியும் என்பதாம். இச் செய்யுளின்கண் ஆடூஉ மகடூஉ முன்னிலைகள் இரண்டும் ஒருங்கேவந்தன. 'மூரியைத் தீற்றிய புல்' என்பது பழமொழி. (5)
|