பக்கம் எண் :

142

210. முன்னை யுடையது காவா திகந்திருந்து
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் வெண்ணெய்மேல்
வைத்து மயில்கொள்ளு மாறு.

(சொ-ள்.) இன் இயல் மை தட கண் மாதராய் - இனிய இயல்பையுடைய மையுண்ட அகன்ற கண்களையுடைய மாதே!, முன்னை உடையது - தான் எளிதாகக் கொள்ளக்கூடிய முன்னால் உள்ள பொருளை, காவாது - பெற்றுக் காவல் செய்தலின்றி, இகந்து இருந்து - விரும்பாது வெறுத்திருந்து, பின்னை - எளிதாகக் கொள்ள முடியாத காலத்து, அஃது - அப்பொருளை, ஆராய்ந்து கொள்குறுதல் - தேடிக்கொள்ளுதல், அஃது ஆதல் - அங்ஙனந் தேடிக் கோடல், வெண்ணெய் மேல் வைத்து - வெண்ணெயை மேலே வைத்து, மயில் கொள்ளுமாறு - அஃது உருகிக் கண்களை மறைத்தபின் மயிலைப் பிடிப்பதோ டொக்கும்.

(க-து.) எளிதாகக் கொள்ளக்கூடிய பொருளைக் கொள்ளாது அரிதாயவிடத்துப் பின்னர் அதனை வருந்திப்பெறுதல் மடமையாகும்.

(வி-ம்.) வெண்ணெயை வைக்கும்போதே மயிலைக் கொள்ளாது அஃது உருகி உக்கபின் மயிலைக் கொள்ளுதல் அறியாமையாதல் போலத் தான் எளிதாகக் கொள்ளுமாறு முன்னே இருப்பதைக் கொள்ளாது கோடற்கு அரிதாய காலத்து அதனை வருந்தப் பெறுதலும் அறியாமையாம். அஃது எனச் சுட்ட வேண்டாதிருக்கவும் சுட்டப்பட்டது மகடூஉ முன்னிலை இடை நின்றதாகலின். இங்ஙனம் வருஞ் செய்யுட்கள் இந்நூலுட் பல.

'வெண்ணெய்மேல் வைத்து மயில் கொள்ளுமாறு' என்பது பழமொழி.

(6)

211. கைவிட்ட ஒண்பொருள்கைவர வில்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயி லன்னாய்
கடம்பெற்றான் பெற்றான் குடம்.

(சொ-ள்.) மடம்பட்ட மான் நோக்கின் - மடப்பம் பொருந்திய மான்போன்ற பார்வையையுடைய, மா மயில் அன்னாய் - சிறந்த மயில் போல்வாய்!, மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தார் -