மெய்யான நெறியிலே நின்று உலக இயலை அறிந்தார், மெய்யாக - உண்மையாகவே, கைவிட்ட ஒண் பொருள் யாதொரு கரியுமின்றிக் கடனாகத் தன் கையினின்றும் விட்ட ஒள்ளிய பொருள், கைவரவு இல்லென்பார் - மீட்டுத் தன் கையின்கண் வருதல் இல்லை என்று கூறுவார்கள், கடம் பெற்றான் - பிறர்க்குக் கடனாகக் கொடுத்த பொருளை மீட்டுப் பெற்றானெனப் படுவான், குடம் பெற்றான் - உறுதி கூறுதற்குப் பாம்புக்குடத்தைப் பெற்றவனேயாவா னாதலால். (க-து.) யாதொரு சான்றுமின்றிக்கடன் கொடுத்தலாகாது. (வி-ம்.) 'மெய்ப்பட்டவாறே உணர்ந்தார்' என்றது மெய்யான நெறியில் நிற்பார்க்கே மெய்ம்மை தோன்றும்; ஆகவே அவர் கூறியதே உறுதி என்பதாம். யாதொரு சான்று மின்மையால் கடம்பெற்றான் குடம்பெற்றானாதலின் கைவிட்ட என்பதற்கு யாதொரு சான்றுமின்றி விடப்பட்ட என்று பொருளுரைக்கப்பட்டது. 'குடம்பெற்றான்' என்றது பண்டைநாளில் வழக்கினைத் தீர்ப்போர் சான்றில்லாதாரைப் பாம்புக் குடத்தின்கண் கையைவிட்டு அவர் வழக்கினைக் கூறுமாறு செய்வர். இது பண்டைய நாளில் தீர்ப்புக் கூறப்பட்ட முறை. 'கடம் பெற்றான் பெற்றான் குடம்' என்பது பழமொழி. (7) 212. கடங்கொண்ட ஒண்பொருளைக்கைவிட் டிருப்பார் இடங்கொண்டு தம்மினே என்றால் - தொடங்கிப் பகைமேற்கொண் டார்போலக் கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய் விடும். (சொ-ள்.) கடம் கொண்ட ஒண் பொருளை - தாம் கடனாகக்கொண்ட ஒள்ளிய பொருளை, கைவிட்டிருப்பார் - பிறரிடம் தம் கையினின்றும் விட்டிருப்பார், இடம் கொண்டு - அவரிடத்திற்சென்று, தம்மினே என்றால் - எம்மிடம் கொண்ட பொருளைத் தரவேண்டுமென்று கேட்டால், பகை மேற்கொண்டார் போல தொடங்கி - தம்மோடு பகையினை மேற்கொண்டவரைப்போலத் தொடங்கி, கொண்டார் வெகுடல் - கடன் வாங்கியவர் சினத்தல், நகை மேலும் - விளையாட்டாகச் செய்தவிடத்தும், கைப்பு ஆய்விடும் -மனதிற்குக் கசப்பாய்விடும். (க-து.) கொடுப்பதாகக் குறித்த காலத்தில் தாங்கொண்ட பொருளைக் கொடாராயின் கடன்கொண்ட ஒண்பொருளை உடையார்க்கு மனக்கசப்பை உண்டாக்கும்.
|