பக்கம் எண் :

144

(வி-ம்.) 'கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட்டிருப்பார்' என்றது, ஒருவரிடத்தில் இன்ன காலத்திற்குள், கொண்ட பொருளைத் தருகின்றேன் என்று தம்பொருட்டு வாங்கி, தம்மிடத்தில் பொருள் உள்ளதை யறிந்து கேட்கும் தட்ட முடியாத ஒருவரிடத்துத் தாங் கூறியிருக்கின்ற வாக்குறுதியைக் கூறித் தம்பொருட்டு வாங்கிய பொருளை அவரிடம் கொடுப்பாரை. 'இடம் கொண்டு தம்மினே என்றல்' என்பது, தமக்குக் கடன் கொடுத்தார் தாங் குறித்த காலத்தில் வந்து பன்முறையும் கேட்க அது பொறாது தாம் கொடுத்த பொருளுடையார் இருக்குமிடம் சென்று பொருளைக் கொடுத்தல் வேண்டுமென்று பணிந்து கேட்பது. 'பகைமேற் கொண்டார் போல' என்றது, முன்னர் நட்பாயிருந்தார் கொடுத்ததைக் கேட்கப் பகை மேற்கொண்டார் போன்றார் என்பது. 'கைப்பாய் விடும்' என்பது, தனக்கு மிக வேண்டியவராதலின் நெருக்கிக் கேட்கவும் இயலாது. தாம் பொருள் பெற்றாரிடம் மறுமொழி கூறவும் இயலாது தன்னைத் தானே நொந்துகொள்வர் போன்று மனங்கசந்து நிற்றல் எனநடைமுறையிற் கூறியவாறாம்.

'கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை' 'வாங்கும்போது இனிப்பு கொடுக்கும்போது கசப்பு' என்பன இச்செய்யுட் பழமொழிகள்.

(8)

23. நன்றியில் செல்வம்

213. அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? - ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
ஆவதே போன்று கெடும்.

(சொ-ள்.) ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ - ஒல்லென்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடற்றுறையை உடையவனே!, கேள் - கேட்பாயாக, தீயன ஆவதே போன்று கெடும் - தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதேபோன்று தோற்றுவித்துத் தன்னெல்லையைக்கடந்து கெட்டுப்போகும் (ஆதலால்), அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை - தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை, நல்லது செய்வார் நயப்பவோ - நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்புதலிலர்.)