பக்கம் எண் :

145

(க-து.) நல்லோர், தீயது செய்வார் செல்வ நிலையாமையை அறிந்து அதனைப் பொருளாக மதித்தலிலராகலின்,தீவினை செய்து பொருளீட்டலாகாது என்பதாம்.

(வி-ம்.) பெறுதற்கரிய செல்வம் தீயார் கைப்படுதலின் நல்லோரால் விரும்பப்படுதலின்றி ஒழிந்தது என்றிரங்குவார் போன்று 'அரும்பொருள்' என்றார். தீயன செய்வார் செல்வம், போங்கால், பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்து அறத்தை உடன்கொண்டு போதலின், நல்லது செய்வார் அதனை விரும்புதலிலர். புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டு போனதுபோல, தீயார் செல்வம் வருவது போன்று தோன்றி, வந்த அளவினும் மிகுந்து போவதாம். அழிவினைச் செய்யினும் அல்லது செய்வார் ஆக்கம் என்று கருதுதலின் 'ஆக்கத்தை'என்றார்.

'தீயன ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.

(1)

214. தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர்
கல்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
தன்மேல் குணில்கொள்ளு மாறு.

(சொ-ள்.) இன் ஒலி நீர் கல்மேல் இலங்கும் மலைநாட - இனிய ஒலியினையுடைய அருவிநீர் கற்பாறைமேல் இழியா நின்று விளங்கும் மலைநாடனே!, தொன்மையில் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார் - பழைய நூல்களில் மாட்சிமைப்பட்ட துணிவு ஒரு சிறிதும் இல்லாதவர்கள், நன்மையில் மாண்ட பொருள் பெறுதல் - நலங்களில் மாட்சிமைப்பட்ட பொருளினை முயன்று உடையராதல், மா - மாமரமானது, காய்த்து - காய்ப்புற்று, தன்மேல் குணில் கொள்ளுமாறு - அதனால் தன்மேல் பிறரெறியும் கல்லை ஏற்றுக்கொள்ளுதல் போலும்.

(க-து.) அறிவிலார் பெற்ற செல்வம் அவர்க்கே துன்பத்தினை விளைக்கும்.

(வி-ம்.) ஈதலும் துய்த்தலுமாகிய நலங்களால் மாட்சிமைப்பட்ட பொருள் என்றார், அறிவிலார் கைப்பட்டு அவற்றையிழந்து நிற்றல் நோக்கி. தொன்மையின் மாண்ட துணிவு என்றது, செல்வத்தாற் பெறும் ஈதலும் துய்தலுமாகியவற்றை. 'ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் றீதல் இயல்பிலா தான்.' செல்வம் ஈதலும் துய்த்தலுமாகிய இயல்புடையது என்பது பழமறைத் துணிவு.