மா காய்ப்புற்றுத் துன்பத்தினைத் தாமே தேடிக்கொள்ளுதல்போல, அறிவில்லார் தாம் பெற்ற செல்வத்தை ஆற்றும் நெறியறியாது தீய வழியில் செலுத்தித் தமது செல்வத்திற்கேயன்றித் தமக்கும் தீங்கினைத் தாமே தேடிக்கொள்வர். ஆகவே,அறிவிலார் செல்வம் பெறுதல் துன்பம் பெறுதலேயாம். 'மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு' என்பது பழமொழி. (2) 215. பெற்றாலும் செல்வம்பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர! மரங்குறைப்ப மண்ணா மயிர். (சொ-ள்.) (கற்றா - கன்றினை உடைய பசு, வரம்பிடை பூமேயும் வண்புனல் ஊர - வரம்பின்கண் உள்ள பூவினை உண்கின்ற வளமையுடைய புனல் நாடனே!, மரம்குறைப்ப மயிர் மண்ணா - மரங்களை வெட்டும் வாள் முதலிய கருவிகள், மயிரினை நீக்குதல் செய்யா; (ஆனால்) கற்றாரும் - பழைய நூல்களின் துணிவைக் கற்றாரும் செல்வம் பெற்றாலும் - செல்வத்தை ஒருகாற் பெற்றாலும், பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார் - வேண்டுவார்க்கு ஒன்றைக் கொடுத்தலுமிலர், தாமுந் துய்த்தலுமிலராகி, பற்றி இறுகுப - பற்றுள்ள முடையவராய் நெகிழாது இறுகப்பிடிப்பர்;இஃது என்னோ என்றவாறு. (க-து.) கற்றவர்கள் ஈதலுந் துய்த்தலுமின்றிஇறுகப்பிடித்தல் அடாத செய்கையாம். (வி-ம்.) மரங்குறைக்கின்ற கருவிகள் மயிரினை நீக்குதல் செய்யா. அதுபோல இறுகப்பிடிக்கும் கல்லார் ஈதல் துய்த்தல் முதலியன செய்யார், இது பொருந்தும். செல்வத்தாற் பெறும் பயன் ஈதலும் துய்த்தலுமே என்று ஐயந்திரிபின்றிக் கற்றார் ஈதல் துய்த்தல் முதலியன செய்தலின் இறுகப் பிடித்து வாழ்வர், இஃது அடாத தென்பது. இது மரங்குறைப்பதற்காக ஏற்பட்ட கருவி மரங்குறையா தொழிதல்போலும். 'பற்றி,' என்று செல்வத்தின் இயல்பு விளக்கியவாறு. பெற்றாலும் என்றது கற்றார் பெறுதற்கரியது செல்வம் எனநடைமுறையில் விளக்கப்பட்டது. 'மரங் குறைப்ப மண்ணா மயிர்' என்பது பழமொழி. (3)
|