216. வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம், - தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம். (சொ-ள்.) தழங்கு அருவி - முழங்குகின்ற அருவிகளையுடைய, வேய்முற்றி முத்து உதிரும் வெற்ப - மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே!, வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் - பிறர்க்கீதலும், தான் அடைதலும் முதலியன அறியாதான், பெற்ற முழங்கு முரசுடை செல்வம் - கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம், நாய்பெற்ற தெங்கம்பழம் அது அன்றோ -நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா? (க-து.) ஈதல் துய்த்தல் இல்லாதான் பெற்ற மிகுந்தசெல்வம் பயனின்றிக் கழியும். (வி-ம்.) 'முழங்கு முரசுடைச் செல்வம்' என்பது செல்வத்தின் மிகுதி. அது என்று சுட்டு வேண்டா திருக்கவும் கூட்டப்பட்டது : ஆடூஉ முன்னிலை இடை நின்றதாகலின். நாய் ஒரு தேங்காயைப் பெறின் தான் உடைத்துத் தின்னவுமறியாது; பிறர்க்குக் கொடுக்கவும் மனமின்றி, உருட்டிக்கொண்ட அலையும். அது போல இவரும் தான் துய்த்தலும் பிறர்க்கீதலுமின்றிப் பூதம் காப்பதுபோலக் காவல்செய்து, பொருளைப் பயன்படாதவாறு செய்வர் 'நாயின் கையில் தேங்காய் அகப்பட்டால் உடைக்கவும் அறியாது உருட்டிக்கொண்டே திரியும்'என்பது வழக்கு. 'நாய்பெற்ற தெங்கம்பழம்' என்பது பழமொழி. (4) 217. முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும் இழவென் றொருபொருள் ஈயாதான் செல்வம் அழகொடு கண்ணி னிழவு. (சொ-ள்.) முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் - முழவு போன் றொலிக்கும் கடலாற்சூழப்பட்ட உலகமுழுதையும் ஆண்ட அரசர்கள், விழவு ஊரில் - திருவிழா நடந்த ஊரில், கூத்தேபோல் - ஆடிய கூத்தைப்போலப் பொலி வின்றி, வீழ்ந்து அவிதல் கண்டும் - செல்வம் கெட்டொழிவதைப் பார்த்திருந்தும், இழவு என்று - நாமும்ஒருநாளில் இப் பொருளை இழந்து நிற்போம்
|