என்று நினைத்து, ஒருபொருள் ஈயாதான் செல்வம் - இரந்தவர்க்கு ஒருபொருளையும் கொடாதவனது செல்வம், அழகொடு கண்ணின் இழவு - வடிவும் அழகும் உடையா னொருவன் கண்ணிழந்து நிற்றலை யொக்கும். (க-து.) செல்வம் ஈகையின்றிவிளங்குதலில்லை. (வி-ம்.) 'முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் வீழ்ந்தவிதல் கண்டும்,' என அரசனது செல்வ நிலையாமையை உணர்த்தியவாறு. இது கண்டாவது ஈதல்வேண்டும் எனக் கண்கூடாக ஒன்று காட்டியவாறு. ஒருவன் வடிவும் அழகும் பெற்றிருப்பினும் கண்களைப் பெறாவிடின் அவை பொலிவுறாவாறு போலச் செல்வம் ஈகையின்றிப் பொலிவுறுதல்இல்லை, 'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி. (5) 218. நாவின் இரந்தார்குறையறிந்து தாமுடைய மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை அஞ்சிலென் அஞ்சா விடிலென் குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென். (சொ-ள்.) நாவின் இரந்தார் - நாவினால் ஒருபொருளை இரந்தாரது, குறையறிந்து - குறைவினை அறிந்து, தாம் உடைய மாவினை - தம்மிடத்தில் உள்ள செல்வத்தை, மாண பொதிகிற்பார் - மாட்சிமைப்படக் கரத்தலைச் செய்வார், தீவினை அஞ்சில் என் - தீய செயல்களுக்கு அஞ்சினால் அவர்கள் அடையும் நன்மையாது?, அஞ்சாவிடில் என் - அஞ்சா தொழியின் அவர்கள் அடையும் தீமை யாது?, குருட்டுக்கண் - பார்வை இல்லாத கண், துஞ்சில் என் - மூடியிருந்தா லென்ன தீமை, துஞ்சாக்கால் என் -மூடியிராது திறந்திருந்தாலென்ன நன்மை? (க-து.) இரப்பார்க்கு கரக்கும் தீவினையே ஏனைய அறங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் ஆற்றல் மிக்கது. தீவினையாயவற்றுள்ளும் தலைசிறந்தது. (வி-ம்.) 'நாவிற்கு இரவின் இளிவந்த தில்' என்றமையின் 'நாவின்' என்றும், இரப்போர் குறையுறுவதற்கு முன்னே குறிப்பறிந்து கொடுத்தலே தக்கது. குறையுற்ற பின்னர்க் கொடுப்பது தக்கது அன்று என்பார் 'குறையறிந்து' என்றுங் கூறினார். தீவினைகளுள் தலைசிறந்த, கரத்தல் என்னும் தீவினையை அவர்கள் செய்து கொண்டமையின் தீவினைக்கு அஞ்சுவதால் வரும் நன்மையால் பயனில்லை என்பர், 'அஞ்சலென்' என்றார்.
|