பக்கம் எண் :

149

வேண்டிய தீவினைகளை அவர்கள் கரத்தல் வாயிலாகச் செய்து கொண்டமையின் தீயசெயல்களுக்கு அஞ்சாமையான் வரும் தீவினை, அவரை யொன்றும் செய்தல் இல்லை என்பார், 'அஞ்சாவிடிலென்'என்றார்.

'குருட்டுக்கண் துஞ்சி லென் துஞ்சாக்கா லென்' என்பது பழமொழி.

(6)

219. படரும் பிறப்பிற்கொன்றீயார் பொருளைத்
தொடருந்தம் பற்றினால் வைத்திறப் பாரே,
அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய
மீவேலி போக்கு பவர்.

(சொ-ள்.) படரும் பிறப்பிற்கு - அடுத்து வருகின்ற பிறப்பிற்கு உதவும்படி, ஒன்று ஈயார் - ஒரு பொருளையும் கொடாராய், தொடரும் தம் பற்றினால் - பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகின்ற தமது பற்றால், பொருளை - ஈதலுந் துய்த்தலுமுடைய பொருளை, வைத்து - அதனால் தாமும் பிறரும் பயன் கொள்ளாதவாறு பயனின்றி வைத்துவிட்டு, இறப்பார் - இறந்துபோவார்; அடரும் பொழுதின்கண் - பகைவர்களோடு போர் செய்யும் பொழுது, குடர் ஒழிய - குடர் சரிந்ததாக, இட்டு - வேறொன்றினை உள்ளேயிட்டு, மீவேலி போக்குபவர் -மேலே கட்டுக்கட்டி வைத்திருப்பவரோடு ஒப்பர்.

(க-து.) அறிவிலார் பொருளால் தாமும் பிறரும்பயன் கொள்ளாதவாறு ஈட்டிவைத் திழப்பர்.

(வி-ம்.) 'படரும் பிறப்பிற்கு ஒன்றீயார்' என்றது தாம் நன்மை யடையும் பொருட்டாவது பிறர்க்கு ஒரு பொருளையும் கொடாதவர்கள் என்றபடி. பொருள் மேலுள்ள ஆசையால் தம் வழியிலுள்ளார்க்கும் பிறர்க்கும் பயன்படா தொழியுமாறு செய்வார் என்பார். அறியப்படாத இடத்தில் 'வைத்திறப்பார்' என்றார். குடர் சரிந்தவிடத்து வேறொன்றையிட்டுக் கட்டினாலும் அவனுக்கும் பிறர்க்கும் நன்மையில்லாதல் போல, அறிவிலார் தாம் ஈட்டிய பொருளை, தமக்கும் பிறர்க்கும்பயன்படுதலின்றி வைத்திழப்பர்.

'அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய
மீவேலி போக்கு பவர்' என்பது பழமொழி.

(7)