220. விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க் குதவல் இரும்பணைவில் வென்ற புருவத்தாய் ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து. (சொ-ள்.) இரும் பணை வில் வென்ற புருவத்தாய் - பெரிய மூங்கிலாகிய வில்லினைத் தனது வடிவத்தால் வென்ற புருவத்தினையுடையாய், விரும்பி அடைந்தார்க்கும் - உணவிற்கு ஒன்றுமின்மையால் வருந்தி அறிமுகமுண்மையால் தன்னை விரும்பி வந்து அடைந்தவர்களுக்கும், சுற்றத்தவர்க்கும் - தம் உறவினர்க்கும், வருந்தும் பசி களையார் - அவர்களை வருத்துகின்ற பசியினை நீக்காராகி, வம்பர்க்கு உதவல் - புதிய அயலார்க்கு உதவி செய்தல், ஆற்ற கரும்பனையன்னது உடைத்து - மிகவும் (தன்னைப் பாதுகாத்து ஓம்பினார்க்குப் பயன்படாது நெடுங்காலஞ் சென்று பிறர்க்குப் பயன்படும்) கரியபனைபோலும் தன்மையை உடையது. (க-து.) அறிவிலார் தமர் பசித்திருப்பப் பிறர்க்கீவர் இஃது அடாது என்பதாம். 'வருத்தும்' என்பது 'வருந்தும்' என எதுகை நோக்கி மெலிந்து நின்றது. (வி-ம்.) 'விரும்பி' என்றமையாலும் 'வம்பர்' என்றமையாலும் அடைந்தார்க்கும் என்றது, முன்னர் அறிமுக முண்மையால் அடைந்தவர்களுக்கும் என்றபடி. துறந்தார், துவ்வாதவர், இறந்தார் என்பார்க்குத் துணையாக நின்று களைகணாய் நிற்றல், உணவு கொடுத்தல், நீர்க்கடன் கொடுத்தல் முதலியன செய்தல் கடனாதலின் 'அடைந்தார்க்கும்' என்றும், 'தமர்கண் வளமையும் முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக' என முன்னர் ஓதுதலின் 'சுற்றத்தவர்க்கும்'என்றும், 'குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையு மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி' என்றலின் 'வருத்தும் பசி' யென்றும், 'ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை'
|